தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாவட்ட தலைவர் சீனிவாசன், “அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி உயர்வு ஏமாற்றம் அளிக்கிறது. விலைவாசி புள்ளியை கணக்கிட்டு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு ஊழியர்களுக்கு நிர்ணயிக்கிறது. அதை பின்பற்றி மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை நிர்ணயிக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறையை தமிழக அரசு பல ஆண்டுகளாக கடைபிடிக்கவில்லை. மத்திய அரசு ஜனவரி 1 முதல் மூன்று சதவீதம் உயர்வை அறிவித்தும் வழக்கம்போல் இந்தாண்டும் தமிழக அரசு அதுகுறித்து சிந்திக்காமல் ஆறு மாதங்கள் நிறுத்திவைத்துள்ளது. கொரோனாவின் போது மத்திய அரசு வழங்கியபோதும் மாநில அரசு 18 மாதங்கள் அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்தது. தமிழக அரசு காலதாமதமாக உயர்வை அறிவிப்பதும், அறிவிக்கும் போது ஆறு மாதங்கள் உயர்வை பறித்துகொள்வது என்ற தந்திரத்தை கையாள்வது வழக்கமாக உள்ளது. எனவே அகவிலைப்படி உயர்வை ஜூலை 1 முதல் என்பதற்கு பதில் ஜனவரி 1 முதல் என முன்தேதியிட்டு வழங்க அரசு உத்தரவிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.