புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பாரதத்தின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இந்த ஆண்டில் முதல் 10 இடத்திற்குள் சென்னை, மதுரை, கோவை இடம் பெறவில்லை. தூய்மைப் பணியில் தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதற்கு இது ஒரு சான்று. மக்கள் டெங்கு காய்ச்சல், தொற்றுநோய்களால் பாதிக்கப்படுவதற்கு தூய்மையின்மையே காரணம். அதனால் தமிழகம் முழுவதும் மக்கள் இயக்கத்தை உருவாக்கி பொதுமக்களிடையே தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். தமிழ் திரைப்படங்களில் அதிக வன்முறை, ஆபாச காட்சிகளை இயக்குனர்கள் திணிக்கின்றனர். இதுபோன்ற திரைப்படங்களை பார்ப்பதால் இளைஞர்கள் கெட்டுப் போகின்றனர். இதேநிலை தொடர்ந்தால் தமிழகத்தில் அரிவாள் கலாச்சாரம் அதிகரிக்கும். இளைஞர்களின் பலவீனங்களை அறிந்து, இயக்குனர்கள் இதுபோன்ற திரைப்படங்களை உருவாக்குகிறார்கள். அவர்களை தவறாக வழிநடத்துகிறார்கள்” என கூறினார்.