ஜம்முவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், ”இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் சென்று துல்லியத் தாக்குதல் எனப்படும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பொய்களின் உதவியுடன் பா.ஜ.க ஆட்சி செய்து கொண்டிருக்கிறது என கூறினார். திக்விஜய் சிங்கின் இந்த கருத்துக்கு ராணுவத்தினர், பொதுமக்கள் என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பல முன்னாள் இந்திய விமானப்படை வீரர்கள், திக விஜய் சிங்கிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திய விமானப்படையின் முன்னாள் அதிகாரி ஏர் மார்ஷல் ரகுநாத் நம்பியார், “இந்த மனிதருக்கு அவர் என்ன பேசுகிறார் என்று தெரியவில்லை. அவர் தவறான தகவல்களை அளிக்கிறார். அவர் உண்மைகளை அறியவில்லை. பாலகோட் தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு மேற்கு விமானப் படையின் தலைமைத் தளபதியாக நான் பொறுப்பேற்றேன், என்ன நடந்தது என்பதை நான் முழுமையாக அறிவேன். எங்கள் துணிச்சலான விமானிகள் அவர்களுக்குச் சொல்லப்பட்டதைச் சரியாகச் செய்தார்கள். நாங்கள் அவர்களுக்காக நிர்ணயித்த அனைத்து இலக்குகளையும் மிகச் சரியாக செய்து முடித்தார்கள் என்று உங்கள் அனைவருக்கும் நான் உறுதியளிக்கிறேன். தயவுசெய்து எந்தப் பொய்களையும் நம்ப வேண்டாம், பாலகோட் வான்வழித் தாக்குதல் அமோக வெற்றி பெற்றது என்பதில் உறுதியாக இருங்கள்” என்று கூறினார்.
மற்றொரு முன்னாள் விமானப்படை அதிகாரி விங் கமாண்டர் பிரபுல் பக்ஷி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகளுக்கு ஆதாரம் அளிக்க வேண்டிய கட்டாயம் இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு இல்லை. அதற்கு என்ன ஆதாரம் நாங்கள் கொடுக்க வேண்டும், ஏன்? உங்களுக்கு அதுகுறித்து தெரிய வேண்டுமானால் பாகிஸ்தானியர்களிடம் கேளுங்கள். அவர்கள் உங்கள் நண்பர்களாக இருந்தால், அவர்கள் உங்களிடம் சொல்வார்கள். அரசு வேண்டுமானால் ஆதாரம் தரலாம். ஆனால் அது ராணுவத்தின் கொள்கைக்கு எதிரானது என்பது அரசுக்கு தெரியும். தாக்குதல் நடந்த இடத்தின் அடையாளங்களை மறைக்க பாகிஸ்தானியர்கள் அதனை தரைமட்டமாக்கினர். யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. இது ஒரு கேள்வியே இல்லை என்று நினைக்கிறேன். ஊடகங்கள் இதற்கு எதிர்வினையாற்றக் கூடாது. தாக்குதல்களுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்டியிட்டுவிட்டது. இப்போது அவர்களின் பிரதமர் பாரதத்துடன் நல்லுறவை விரும்புகிறார்கள். எல்லாம் வல்லவன் கேட்டாலும் பதில் சொல்லாமல் இருப்பது ராணுவத்தின் கடமை” என்றார்.