மின்சாரத்தில் கைவைத்தாரா மின்சாரத்துறை அமைச்சர்?

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் ரபேல் கைக்கடிகாரம் அவருக்கு பரிசாக கிடைத்தது, முடிந்தால் அதற்கான ரசீதை காட்டட்டும் என்று தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்கி வருகிறார். இதுகுறித்து, அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, “முன்பு கூறியது போல, வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ரபேல் கைக்கடிகாரத்துக்கான ரசீது மட்டுமில்லாமல் என்னுடைய அனைத்து சொத்து விவரங்களையும் வெளியிடுவேன். என்னிடம் பில் கேட்பவர்கள் யார்?ஊழல்வாதிகள்.ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் இவர்களிடம் கேள்வி கேட்க மக்களுக்கு உரிமை உள்ளது.இன்றைக்கு தான், 75 வருட அரசியல் வரலாற்றில், ஒரு சாமானிய மனிதனை பார்த்து ஆட்சியில் இருப்பவர்கள் கேள்வி கேட்கிறார்கள்.எம்.ஜி.ஆர் ஐயாவை பார்த்து கேள்வி கேட்டார்கள்.நானெல்லாம் எம்.ஜி.ஆர் நகத்தின் தூசுக்கு கூட சமம் இல்லாதவன்.இன்றைக்கு, 2வது முறையாக சாமானிய மனிதனை பார்த்து ஆளும் கட்சி கேள்வி கேட்க துவங்கியிருக்கிறது.நான், எனது கைக்கடிகாரத்துக்கான ரசீதை நிச்சயம் மக்கள் மன்றத்தில் வைப்பேன்.இதைத்தவிர, தமிழக முதல்வரின் குடும்பம் மற்றும் 13 அமைச்சர்களின் சொத்து பட்டியலை நான் தயார் செய்து வருகிறேன்.அது இப்போதே சுமார் ரூ.2 லட்சம் கோடியை தொடுகிறது. அவர்களின் சொத்துக்கள், வீட்டில் உள்ள பொருட்கள், பொறியியல், மருத்துவ கல்லூரிகள், இந்தோனேஷியாவில் உள்ள துறைமுகம், லண்டன் மற்றும் துபாயில் உள்ள நிறுவனங்களின் விவரங்கள் எல்லாம் விரைவில் வெளிவரும். தி.மு.க. எங்களை தொட்டு விட்டது.இதற்கு, முடிவுரையை பா.ஜ.க. எழுதும். இந்த பட்டியலில், செந்தில் பாலாஜிக்கு கரூரில் உள்ள 650 ஏக்கர் நிலம், சாரய நிறுவனத்தில் உள்ள பங்கு உள்ளிட்ட அனைத்தையும் வெளியிடுவேன், உச்ச நீதிமன்றத்தில் அவருக்காக ஆஜராகும் வழக்கறிஞருக்கு ஒரு அமர்வுக்கு செந்தில் பாலாஜி அளிக்கும் கட்டணம் என்பது சாமானிய மக்களின் 10 வருட சம்பளத்துக்கு சமம்” என கூறியிருக்கிறார்.இதனிடையே, “அண்ணாமலை வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசிக் கொண்டிருக்கிறார்.இது வெளிப்படையான உலகம்.மடியில் கனமில்லை.அதனால் வழியில் பயமில்லை.அண்ணாமலை பட்டியலை வெளியிடட்டும்.நீதிமன்றம் இருக்கிறது.ஆதாரம் இருந்தால் சட்டப்படி எப்படி செல்லச் வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும்.எதையும் எதிர்கொள்ள தி.மு.க ஆட்சி தயார்” என ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.