தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், கடந்த 5ம் தேதி திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்துக்கு 2,000 கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளன. 5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்றடைய வேண்டிய, 800க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர்களுக்கே தெரியாமல் தனியார் பின்னலாடை நிறுவனங்களுக்கு மாநகராட்சி வழங்கி உள்ளது. இது தொடர்பாக, திருப்பூர் மாநகராட்சி மீது மாவட்ட சுகாதாரத்துறை குற்றம் சாட்டியுள்ளது. 18 வயதுக்கும் மேற்பட்ட மற்றும் 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசிகள் இவை.
இது குறித்து, திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் மருத்துவர் ஜெகதீஷ்குமார், ‘நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு தெரியாமல், தனியார் பின்னலாடை நிறுவனத்தில் தடுப்பூசி போட்டுள்ளனர். தனியார் மருத்துவமனை மருத்துவர்களை வைத்து தடுப்பூசி போடக்கூடாது. அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கொண்டே தடுப்பூசி போட சொல்லித்தான் அரசு வழிகாட்டும் நெறிமுறையில் உள்ளது’ என்றார்.
ஆனால், ‘அரசு விதியின்படி, புலம்பெயர் பின்னலாடை நிறுவனத் தொழிலாளர்களுக்கு முன்உரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் செலுத்த உத்தரவு உள்ளது. அதன்படி, பனியன் நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. போதிய அரசு மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கொண்டு தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. எதையும் மறைத்து செய்யவில்லை’ என்று கூறியுள்ளார் திருப்பூர் மாநகர் நல அலுவலர் பிரதீப் வாசுதேவ கிருஷ்ணகுமார். இதில், முறைகேடுகள் எதுவும் நடந்துள்ளதா என விசாரணை நடத்த வேண்டும். அதே சமயம், தடுப்பூசியை கையாள்வதில் சுகாதாரத்துறையினரும் கவனமாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.