தமிழக முதல்வர் ஸ்டாலின், தி.மு.க.வினருக்கு எழுதிய கடிதத்தில், “எக்காரணம் கொண்டும் சொல்லிலும் செயலிலும் அலட்சியமான போக்கு வேண்டாம். இரண்டையும் கவனத்துடன் கையாளுங்கள். நம்மிடமிருந்து வெளிப்படும் சொற்கள், அதனை வெளிப்படுத்தும் உடல்மொழி, நம்மை நாடி வரும் மக்களை அணுகும் முறை என அனைத்திலும் கவனமுடனும் பொறுப்புடனும் கண்ணியம் துளியும் குறைந்து விடமால் செயலாற்றுங்கள். நம் தரப்பிலிருந்து தவறுகளுக்கோ, குறைகளுக்கோ குன்றிமணி அளவுகூட இடம் தரக்கூடாது. அப்படி ஏதேனும் ஒன்றிரண்டு நிகழ்வுகள் என் கவனத்திற்கு வந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுத்திட சிறிதும் தயங்க மாட்டேன்” என தெரிவித்துள்ளார். அப்படியெனில், தி.மு.க அமைச்சர் துரைமுருகன், “எங்களுக்கு தர்றதா சொன்ன 1,000 ரூபாய் எங்கேன்னு கேட்குறீங்களா? இப்பத்தான் சில்லரை மாத்திக் கொண்டிருக்கிறோம். விரைவில் 1,000 ரூபாய் வழங்குவோம். உனக்கு 1,000 ரூபாய், ங்கொம்மாளுக்கு 1,000 ரூபாய் என நக்கலாக பேசியது, தி.மு.க அமைச்சர் பொன்முடி, “உங்களுக்கு எல்லாம் ரூ. 4,000 ஆயிரம் கொடுத்தது யாரு வாய் திறந்து சொல்லுங்க. பெண்கள் எங்கே போனாலும் ஓசி பஸ்ஸில் தானே செல்கிறீர்கள் என தமிழக பெண்களை இழிவுபடுத்தியது, தி.மு.க எம்.எல்.ஏவான எஸ்.ஆர். ராஜா தனது கும்பலுடன் தொழிற்சாலை ஒன்றிற்குள் புகுந்து அங்கு பணியில் இருந்த ஊழியர்களை மிரட்டியது, தி.மு.கவின் கவுன்சிலர்களில் தொடங்கி எம்.பி., எல்.எல்.ஏ, அமைச்சர்கள், கூட்டணிக் கட்சியினர் வரை செய்யும் அராஜகங்கள், ஹிந்து மத விரோத செயல்பாடுகள் எதுவும் ஸ்டாலினுக்குத் தெரியாதா, தெரிந்திருந்தால் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்? என சமூக ஊடகங்களில் மக்கள் கேட்கின்றனர்.