வெள்ளைப் பூஞ்சை தொற்று கண்டுபிடிப்பு

கொரோனா தொற்றைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கறுப்பு பூஞ்சை தொற்று கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவில் 4 பேருக்கு வெள்ளைப் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பூஞ்சைகளால் அரிதான கறுப்பு பூஞ்சை நோய் தொற்று மண், தாவரங்கள், அழுகும் காய்கறி பழங்களில் காணப்படுகிற ஒருவகை பூஞ்சையால் உருவாகிறது. ‘மியூகோர்மைகோசிஸ்’ என்று அழைக்கப்படுகிற இந்த கறுப்பு பூஞ்சை நோய் சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரலை தாக்குகிறது. இத்தொற்று ஏற்பட்டால் முகம், கண் கீழ்ப்பகுதியில் வலி, வீக்கம், மூக்கடைப்பு, கண் மங்குதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். ஆனால், இது குணப்படுத்திவிடக்கூடிய நோய் தான். அதேபோல, தற்போது கண்டறியப்பட்டுள்ள வெள்ளை பூஞ்சை நோயும் குணப்படுத்தக்கூடியதுதான். இதற்கு மருந்துகளும் ஏற்கனவே உள்ளன என்பதால் பீதியடையத் தேவையில்லை. எனினும் கறுப்பு பூஞ்சையை விட சற்றே மோசமானது வெள்ளை பூஞ்சை தொற்று. இது நுரையீரல், நகங்கள், தோல், வாய் வயிறு, சிறுநீரகம், மூளை, பிறப்புறுக்களையும் பாதிக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, இது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.