அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம், சிவில் சமூக அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு, ஒருங்கிணைந்தஆராய்ச்சி மற்றும் பரவலாக்குதல் ஆகியவற்றால் 13 அக்டோபர், 2022 அன்று ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது, இதையொட்டி 14 அக்டோபர் 2022 அன்று செய்தித்தாள்களில் பல செய்திகள் வெளியிடப்பட்டன.ஆனால் அந்த அறிக்கை பொதுதளத்தில் கிடைக்கவில்லை. கொரோனா காலத்தில் ஏழைக் குடும்பங்களை நிலைக்கச்செய்து ஆதரிப்பதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் ஆற்றிய முக்கியப் பங்கை பெரும்பாலான அறிக்கைகள் பாராட்டியுள்ளன. இருப்பினும், சில அறிக்கைகள் இத்திட்டத்தின் தன்மையைப் பாராட்டத் தவறிவிட்டன. இதன் விளைவாக அதைச் செயல்படுத்துவதில் தவறான சித்தரிப்பு ஏற்பட்டுள்ளது. ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்களில் 39 சதவீதம் பேருக்கு 2021 நிதியாண்டில் ஒரு நாள் வேலை கிடைக்கவில்லை என்று பல அறிக்கைகள் கூறுகின்றன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஒரு கோரிக்கை மூலம் செயல்படுத்தப்படும் திட்டம் என்பதை எடுத்துரைப்பது அவசியமாகும். பதிவு செய்யப்பட்ட அனைத்து குடும்பங்களும் வேலை கோரியதாகக் கருதிக்கொள்வது சரியாக இருக்காது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் கிராமப்புறங்களில் உள்ள ஒரு குடும்பம் கேட்டுக்கொள்வதற்கேற்ப குறைந்தபட்சம் 100 நாட்கள் கூலி வேலைக்கான உத்தரவாதத்தையே வழங்குகிறது. இந்தத் திட்டத்தை முறையாக செயல்படுத்த, ஊதியம் மற்றும் பொருள்கள் வழங்குவதற்கான நிதியை வெளியிட மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த சட்டத்தின் விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மத்திய அரசைப் போலவே மாநில அரசுகளுக்கும் பொருந்தும்’ என விளக்கமளிக்கப்பட்டு உள்ளது.