பெரம்பலூரில் தொடரும் கோயில்கள் இடிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் அடிக்கடி ஹிந்து கோயில்கள், சாமி சிலைகள் மட்டும் குறிவைத்து தாக்கி உடைக்கப்படுகிறது,. இத்தகைய தொடர் கோயில் சிலைகள் உடைப்பின் பின்னணியில் சதி உள்ளதாக இந்து முன்னணி மாநில பொதுச் செயலார் முருகானந்தம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், “பெரம்பலூர் நாரணமங்கலம் பகுதியில் அய்யனார் முத்துசாமி திருக்கோவிலில் 8 சாமி சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. மே மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. பூசாரிகள் கொடுத்த புகாரின் பேரில் விசாரித்த காவல்துறையினர், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கோவில் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது என்றுள்ளனர். ஹிந்துக் கோவில் சிலைகள் தாக்கப்பட்டால் மட்டும் அடையாளம் தெரியாத நபர்கள் அல்லது மனநிலை சரியில்லாத நபர்கள் என வழக்கை கிடப்பில் போட்டு விடுகின்றது காவல்துறை. இது ஏதோ அந்த பகுதியில் புதிதல்ல. ஒரு வருடத்திற்கு முன்பாக பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் பெரியசாமி கோயில் சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்ட வழக்கில் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. திராவிட மாடல் ஆட்சியில் ஒருபக்கம் ஆட்சியாளர்களால் கோயில்கள் இடிக்கப்படுகிறது. இன்னொரு புறம் அடையாளம் தெரியாத நபர்களால் கோயில் சிலைகள் உடைக்கப்படுகிறது. நக்சல் நடமாட்டமுள்ள பெரம்பலூர் பகுதியில் அடிக்கடி கோயில்கள் உடைக்கப்படுவதை ஆளும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். சிறுபான்மை வழிபாட்டு தலங்களின் மீது தூசி விழுந்தாலும் துடித்துப் போகும் தி.மு.க போன்ற கட்சிகள் பெரும்பான்மை ஹிந்து கோயில்கள் இடிக்கப்பட்டாலும் இன்பம் காணும் வக்கிரபுத்தியில் வாழ்கிறது. கோயில்களின் வருமானத்தில் வாழும் ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் ஹிந்துக் கோயில்களின் நிலை சீரழிந்து, பாதுகாப்பற்று கிடக்கிறது. ஹிந்துக் கோவில்களை சேதப்படுத்துபவர்களை துரித கதியில் பிடித்து கடுமையான சட்டங்களின் மூலம் அவர்களை தண்டிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.