சட்டமன்றத் தேர்தலில் பணம் பாதாளம் வரை பாய்ந்த்து; கூடவே ஜனநாயகமும்!

ஒரு மாத காலமாக நடந்த தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தலைவர்களின் சூறாவளிப் பிரசாரம், ரெய்டு காட்சிகள், தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள். இவற்றுக்கு நடுவே வாக்காளர்களைக் குறிவைத்து ‘பணம்’ என்ற பிரம்மாஸ்திரத்தை ஏவின கட்சிகள். 11 மாவட்டங்களில் 105 தொகுதிகளில் பணப் பட்டுவாடா அதிகரித்துள்ளதாக மாநில தேர்தல் ஆணைய தகவல்.

தமிழகத்தில் திருமங்கலம் ஃபார்முலா நுழைந்த பின்னர், நடைபெற்ற எல்லா தேர்தலிலும் பணமே பிரதான அங்கம் வகித்தது. வீடு வீடாகச் சென்று ஓட்டுக்குப் பணம் தந்தால் பிரச்னையாகும் என நினைத்த கட்சிக்காரர்கள், நகர்ப்புற பகுதிகளில் கொரோனா நாள்களில் பல ஊர்களில் மளிகைச் சாமான்களை விநியோகம் செய்வதற்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள், தெருக்களில் இருக்கும் நலச் சங்கங்கள் போன்றவற்றை பயன்படுத்தினர். டோக்கன் விநியோகம் செய்து கச்சிதமாக காரியத்தை முடித்தனர்.

இந்நாள்/முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் தொகுதிகளில் ஓட்டுக்கு ரூ.1000 முதல் ரூ.5000 வரை; மற்ற தொகுதிகளில் 500 ரூபாய். — இது ஆளுங்கட்சி /எதிர்க்கட்சி டெலிவரி ஃபார்முலா. ஓட்டு வாங்குவதில் சிக்கல் ஏற்படும் என நினைக்கும் ஏரியாக்களில் இந்த ஆஃபர் அதிகமானது. விழுப்புரம் தொகுதியில் ஓட்டுக்கு 1,000 ரூபாய் கொடுத்தனர். கூடவே, வீட்டுக்கு ஒரு மளிகை டோக்கனை விநியோகித்தனர். குறிப்பிட்ட சில மளிகைக் கடைகளில் இதைக் கொடுத்து, 2,500 ரூபாய் பெறுமானமுள்ள மளிகைப் பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் என்று உறுதியளித்துச் சென்றனர். திருவொற்றியூர், ராயபுரம், ராஜபாளையம் ஆகிய தொகுதிகளிலும் இந்த மளிகை டோக்கன் ஃபார்முலாவை கட்சிகள் பின்பற்றின. திருச்சி முசிறி பெட்டவாய்த்தலை அருகே ஒரு கோடி ரூபாய் சாக்கு மூட்டையில் கைப்பற்றப்பட்டது. இந்த பணம் யாருடையது என்ற கேள்விக்கு பதில் இல்லை. அரசியல் கட்சி வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்கு கொண்டு சென்றது என்பது மட்டும் உறுதியானது.

தடயமில்லாமல் கொலை!
தமிழகத்திலேயே சென்னை, கோவைக்கு அடுத்து அதிகம் பணம் பிடிபட்டது சேலத்தில்தான். கூடவே போலி டோக்கன்களும்! சேலம் மாவட்டத்திலுள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஏப்ரல் 5-ம் தேதி மதியத்திலிருந்து, ஒரு கட்சியின் தலைவர்கள் படம் போட்ட டோக்கன்கள் விநியோகித்தனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஃபார்முலாவை பயன்படுத்தி, வாக்குப்பதிவு முடிந்து இருதினங்கள் கழித்து சூப்பர் மார்க்கெட்களில் கொடுத்தால், குறிப்பிட்ட டோக்கன்களுக்கு 5,000 ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருள்கள் வழங்குவதாகக் கூறப்பட்டது. சென்னையின் வில்லிவாக்கம், விருகம்பாக்கம் தொகுதிகளில் பண விநியோகம் வித்தியசமாக அமைந்தது. வீடு வீடாக ஓட்டுக்குப் பணம் தரும்போது, வீட்டுக்கு ஒரு டோக்கனை விநியோகித்தனர். ‘‘இந்த டோக்கனைக் குறிப்பிட்ட கறிக்கடையில் கொண்டு போய்க் கொடுத்தால் 700 ரூபாய் பெறுமானமுள்ள ஒரு கிலோ ஆட்டுக்கறி கிடைக்கும்’’ என்றனர்.

கழகப் பணப் பந்தயம்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தொகுதியில் 500, 1,000 ரூபாயும் அளிக்கப்பட்டிருக்கிறது. விநியோகம் பரபரப்பாக நடந்த வேளை யில், ஏப்ரல் 5-ம் தேதி காலை ராசிபுரம் – புதுப்பட்டி சாலையிலுள்ள பட்டணம் கிராமத்தில், 50-க்கும் மேற்பட்ட மக்கள் திடீரென சாலை மறியல் செய்தனர். போலீஸாரும் தேர்தல் பறக்கும் படையினரும் பதறியடித்துக் கொண்டு வந்து விசாரித்தனர்.

‘‘குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஒரு கட்சியினர் ஓட்டுக்குப் பணம் கொடுத்துட்டு, எங்களை ஏமாத்திட்டாங்க. எங்களுக்குப் பணத்தை வாங்கிக் கொடுங்க” என்று போராட்டக்காரர்கள் சொல்லவும், போலீஸார் விக்கித்துப்போய் விட்டனர்.சென்னை தி.நகர் தொகுதி எதிர்க்கட்சி வேட்பாளர் சார்பில், ஒரு குடும்பத்துக்கு 1,000 ரூபாய் வீதம் கொடுத்திருக்கிறார்கள். சேப்பாக்கம் -திருவல்லிக்கேணியிலும் இதேபோல கொடுத்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் விதமாக, ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் வீடு வீடாகச் சென்று ஆதார் நகலை பெண்கள் வாங்கிச் சென்றனராம். அடுத்த அரைமணிநேரத்தில் குடும்பம் ஒன்றுக்கு மொத்தமாக 5,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டதாம். அமைச்சர் வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதியிலும் 5,000 ரூபாய் வரை கொடுக்கப்பட்டுள்ளது.

திருநல்வேலிக்கே அல்வா
இந்த தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஒரு லட்சம் போலீசார் தபால் வாக்குப் போட தேர்தல் கமி‌ஷன் விரிவான ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி ஒவ் வொரு மாவட்டத்துக்கும் தபால் ஓட்டுக்கான விண் ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இதில் திருச்சியில் உள்ள தபால் ஓட்டுகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள ஒரு அரசியல் கட்சி ‘கவர்’களில் பணப்பட்டுவாடா செய்துள்ளது. இந்த தகவல் தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகளுக்கு தெரியவர, போலீஸ் நிலையங்களில் அதிரடி சோதனை! திருச்சி தில்லைநகர் போலீஸ் நிலையம், திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் இந்தக் கண்றாவி அரங்கேறியதில் கவர், கவராக லட்சக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது. போலீசார் ஓட்டுக் களுக்கே காசு! பாதுகாப்புப் பணியில் உள்ள காவலர்களே பணம் பெற்றுக் கொண்டு வாக்கு போடுகிறார்கள் என்றால், ஜனநாயகத்தின் கதி?

நேற்று
2019 நாடாளுமன்ற தேர்தலின் போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே அரசியல் கட்சிகள் பணப் பட்டுவாடாவையும் ஆரம்பித்து விட்டன. வேலூரில் வருமான வரித்துறையினர் திமுக நிர்வாகி ஒருவரின் குடோனிலிருந்து 11.5 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளாக அறிவிக்கப்பட்ட திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வீட்டில் ரூ.19 கோடி பணம் கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில், 2019 ஏப்ரல் 18ம் தேதிக்குள் தமிழகம் மற்றும் புதுவையில் சுமார் 10,000 கோடி ரூபாய் வெளியே வரக்கூடும் என நுண்ணறிவுப் பிரிவு போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கோடி கோடியாக பணத்தை எந்த வங்கி வழங்கியது என கண்டுபிடித்துவிட முடியும் எனக் கூறினார். வெளியிட்டுள்ள அறிக்கையில், 2016 மார்ச் 25, வரை மொத்தம் ரூ.539.992 கோடி மதிப்பிலான பணமும் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்றது தேர்தல் ஆணையம். ஜனநாயகம் மதிப்பிழந்து பல வருடங்கள் ஆகி விட்டன.

இன்று
ஒரு அரசியல் கட்சி தேர்தலில் வெற்றி பெற, ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்கு ரூ. 380 கோடி கொடுத்து அரசியல் வியூகம் வகுக்க முடிவு எடுத்தது என்றால், சாதனைகளை கூறி, செய்யப் போகும் திட்டங்களை கூறி வாக்கு கேட்கத் தயக்கம் உள்ளது என்றுதான் பொருள். தமிழகத்தின் வருவாய் என்ன என்பது கூட தெரியாமல், இலவச திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து தேர்தல் அறிக்கை வெளியிடுவது இன்னொரு அவலம். தமிழகத்தில் ஜனநாயகத்தை குழி தோண்டிப்புதைத்த பெருமை இரு கழகங்களையும் சாரும்.

நாளை
வரும் தேர்தல்களில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்தின் அளவு தேர்தலுக்கு தேர்தல் உயரும்! அதாவது கருப்பு பணத்தை உருவாக்கியவர்களே இனி தேர்தலில் நிற்க முடியும் என்ற கோரம் தலைவிரித்தாடும். ஜனநாயகத்திற்கு எதிராக பண நாயகத்தை வளர்த்தவர்கள் திராவிட இயக்கத்தினர். வேட்பாளர் தேர்வின் போதே, தொகுதிக்கு எவ்வாறு பணியாற்றுவாய் என்ற கேள்வியை விட, எவ்வளவு பணம் செலவழிப்பாய், உனது ஜாதியினரின் வாக்குகள் பெறமுடியுமா என்றுதான் கேட்கிறார்கள். இந்நிலை மாற தேர்தல் சீர்திருத்தம் ஒன்றே வழி.