பாரதத்திடம் கூடுதல் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கேட்டு உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” உக்ரைன் பாரதத்திடம் கூடுதல் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கேட்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி, பிரதமர் மோடிக்கு கடிதம் வாயிலாக இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் என் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 நாள் பயணமாக பாரதம் வந்துள்ள உக்ரைன் வெளியுறவுத்துறை இணையமைச்சர் எமின் தபரோவா, பாரத வெளியுறவுத்துறை துணை அமைச்சர் மீனாட்சி லேகியை சந்தித்தார். அப்போது அவரிடம் அந்தக் கடிதம் வழங்கப்பட்டது. மேலும், இந்தச் சந்திப்பின்போது, உக்ரைனின் உள்கட்டமைப்பை மீளுருவாக்கம் செய்வது பாரத நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று எமின் தபேரோவா கூறியிருந்தார்.
மீனாட்சி லேகி இதுகுறித்து வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவில், கடந்த ஆண்டு ரஷ்ய அதிபர் புதினை பாரதப் பிரதமர் மோடி சந்தித்த போது, ‘இது போருக்கான காலமில்லை’ என்று சுட்டிக்காட்டியதை மீண்டும் வலியுறுத்தினார். மேலும் “எமின் தபரோவாவை சந்தித்ததில் மகிழ்ச்சி. ஒத்தக் கருத்துடைய இரண்டு நாடுகளும் இருதரப்பு பார்வைகளையும், உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களையும் பரிமாறிக்கொண்டது. இந்த சந்திப்பின்போது, இருதரப்பு கலாச்சார உறவுகள், பெண்களுக்கான அதிகாரம் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. உக்ரைனுக்கு கூடுதல் மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாரதம் வந்திருந்த எமின் தபரோவா, பாரதத்துக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நெருங்கிய தூதரக உறவுகளை சுட்டிக்காட்டி, எரிசக்தி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உட்பட அதன் வளங்களை பாதுகாப்பதில் பாரதம் நடைமுறையில் இருக்க வேண்டும். மற்ற நாடுகளுடனான பொருளாதார உறவுகள் குறித்து பாரதத்துக்கு அறிவுறுத்தும் நிலையில் நாங்கள் இல்லை. ஆற்றல் மட்டுமின்றி ராணுவ வளங்கள் அனைத்தையும் பன்முகப்படுத்துவது மட்டுமே முக்கியம் என்று நாங்கள் நினைக்கிறோம்” என கருத்து தெரிவித்திருந்தார். மேலும், பாரதப் பிரதமர் மோடியின் ஜனநாயகம், உரையாடல் மற்றும் பன்முகத்தன்மை மற்றும் ‘இது போருக்கான காலமில்லை’ என்ற அறிவுரைகளை எல்லாம் வெகுவாக பாரட்டியிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.