டெல்லிக்கு தேவைக்கு அதிகமாகவே மத்திய அரசு ஆக்ஸிஜன், மருந்துகள் வழங்கியும் எங்களுக்கு தேவையான ஆக்ஸிஜன், மருந்துகள் கிடைக்கவில்லை என மத்திய அரசு மீது பொய்யான குற்றச்சாட்டை வைத்து அரசியல் செய்து வருபவர் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். நீதிமன்றத்தில் இதை மத்திய அரசு ஆதாரத்துடன் விளக்கியது.
மகாராஷ்டிரா, பூனாவில் அம்மாவட்ட நிர்வாகம் ஆக்ஸிஜன் பயன்பாடு குறித்த தணிக்கை செய்து தினமும் 30 டன் ஆக்ஸிஜனை சேமிக்கிறது. ஆனால், பலமுறை மத்திய அரசு கூறியும் கெஜ்ரிவால் அரசு தணிக்கை செய்ய தொடர்ந்து மறுத்து வருகிறது.
அரவிந்த் கெஜ்ரிவால் அரசு 2021ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டுமே ஊடக விளம்பரங்களுக்காக ரூ. 150 கோடி செலவிட்டுள்ள நிலையில், இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் “ஆக்ஸிஜன் நெருக்கடி காலத்தில் டில்லி அரசு சரியாக செய்யாத ஐந்து விஷயங்கள்” என்ற தலைப்பில் டெல்லியில் ஆக்ஸிஜன் விநியோகம், ஆக்ஸிஜன் மையங்கள் நிறுவுதல், ஆக்ஸிஜனை நிரப்பி அனுப்புவதில் குளறுபடிகள், நோயாளிகளுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை, தொலைபேசி எண்கள் அமைக்காதது, கொரோனா இரண்டாவது அலை தொடங்கிய பின்னும் மந்தமாக செயல்பட்டது உள்ளிட்ட டெல்லி அரசின் இமாலய தவறுகளை விளக்கி ஒரு கட்டுரையை வெளியிட்டது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத கெஜ்ரிவால் அரசு, அரசின் செய்திகளை வெளியிடும் தனது வாட்ஸ்அப் குழுவிலிருந்து இந்த கட்டுரையை எழுதிய 7 இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையாளர்களை வெளியேற்றியது.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் முகநூல் பக்கத்தில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் அமைச்சருமான இம்ரான் உசேன் டெல்லியில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விநியோகிக்கும் ஒரு படம் இடம் பெற்றது. பொது மக்களுக்கு கடுமையான பற்றாக்குறை இருக்கும்போது அமைச்சருக்கு மட்டும் எப்படி இவ்வளவு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கிடைத்தன என்று விசாரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதனையடுத்து, ஆக்ஸிஜன் சிலிண்டர் பதுக்கல் வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் அமைச்சருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இப்படி, தனது மலிவான அரசியல் லாபத்திற்காகவும், தனது நிர்வாக திறமையின்மையை மறைப்பதற்காகவும் மத்திய அரசை வீணாக குற்றம் சாட்டுவதுடன் மக்களின் உயிருடனும் விளையாடுகிறார் கெஜ்ரிவால்.
- மதிமுகன்