ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே நேரடியாக, டெலிவரி செய்யும் திட்டத்தை செயல்படுத்த, டில்லி மாநில அரசு திட்டமிட்டிருந்தது. இதனை மறுபரிசீலனை செய்ய டில்லி துணை நிலை கவர்னர் கூறினார். ஆனால், துணை நிலை கவர்னர் இத்திட்டத்திற்கு அனுமதி மறுத்ததாக கெஜ்ரிவால் தரப்பு கூறுகிறது.
இந்நிலையில், இது குறித்து மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ‘கொரோனா காலத்தில் டில்லியில் வாழும் மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான ஆக்சிஜனையே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலால் தர முடியவில்லை. இவர்களால் ரேஷன் பொருட்களை மட்டும் எப்படி வீடுவீடாக கொண்டுபோய் தந்து விட முடியும். அவர்கள், வீடுகளுக்கே ரேஷன் பொருட்களை கொண்டு சென்று கொடுப்பதாக கூறுவது பொய்யானது. டில்லி மாநில அரசு, ரேஷன் மாபியாக்களின் பிடியில் சிக்கியுள்ளது. இந்த கொள்ளையர்கள்தான், அனைத்து ரேஷன் பொருட்களையும் கட்டுப்படுத்துகின்றனர். தேசத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் உதவும் வகையில், ஆதார் திட்டத்தின் அடிப்படையில், ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. ஆனால், டில்லி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில்தான் இந்த திட்டம் அமலாகவில்லை. பொய்யான வாக்குறுதி தந்து மக்களை ஏமாற்றுகிறார் கெஜ்ரிவால். எந்த நேரமும், டிவி, சமூக ஊடகங்களில் பேசுவது மட்டுமே கெஜ்ரிவாலின் வேலை’ என தெரிவித்துள்ளார்.