கொரோனா பரவல் காரணத்தால் நமது தேசம் மிகவும் இக்கட்டான கட்டத்தில் பயணித்துக்கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் குறித்து தவறான தகவல்கள், பழைய செய்திகளை புதியதுபோல் வெளியிடுவது போன்ற, மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் பொய் செய்திகளை நீக்க, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை டிவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, பொய்யான பல பதிவுகள் நீக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில், கொரோனா பரவல் குறித்து பொய் கருத்து தெரிவித்த காங்கிரசை சேர்ந்த எம்.பி., ரேவந்த் ரெட்டி, மேற்கு வங்க அமைச்சர் மோலோய் கடக், நடிகர் வினீத் குமார் சிங் உள்ளிட்டோரின் டிவிட்டர் பதிவுகள் சமீபத்தில் நீக்கப்பட்டன. மத்திய அரசை விமர்சித்து கூறப்படும் கருத்துகளை நீக்கும்படி கூறவில்லை. சமூக வலைதளத்தில் பதிவுகளை வெளியிடுவோர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது.