விசாரணையில் குறைபாடு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளியில் பயின்றுவந்த பிளஸ் 2 மாணவி ஒருவர் கடந்த 13ம் தேதி பள்ளி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அப்பள்ளியில் திட்டமிட்ட கலவரத்தை சில சமூக விரோத சக்திகள் அறங்கேற்றினர். மாணவி உயிரிழப்புத் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதனை விசாரிக்க தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங் கானூங்கோ தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் சின்னசேலம் தனியார் பள்ளி மாணவியின் உயிரிழப்புக் குறித்து விசாரணை நடத்தினர். இக்குழுவினர் மாணவியின் பெற்றோர், இச்சம்பவத்தில் முதற்கட்டமாக விசாரணை நடத்திய காவல்துறையினர், வருவாய் துறையினர், கல்வித்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து பள்ளி, பள்ளி விடுதிக்குச் சென்று ஆய்வு நடத்தினர்.  மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையை பெற்றுக்கொண்டனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரியங் கானூங்கோ, “மாணவி உயிரிழப்புத் தொடர்பான விசாரணையில் முகாந்திரமாக சில குறைபாடுகளும், விசாரணை அதிகாரிகளின் கவனக்குறைவு இருப்பதும் எங்களது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மாணவி தங்கியிருந்த விடுதியில் கூடுதல் விசாரணை செய்ய உள்ளோம். இது தொடர்பான அறிக்கையை மத்திய, மாநில அரசுகளிடம் விரைவில் சமர்ப்பிப்போம்” என்று தெரிவித்தார்.