மலேஷிய அமைச்சர்களுடன் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் பேச்சு

தென் கிழக்காசிய நாடான மலேஷியா சென்றுள்ள, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்த நாட்டு பிரதமர், வெளியுறவு அமைச்சருடன் இரு தரப்பு உறவு குறித்து விரிவாக பேச்சு நடத்தினார். நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று நாள் பயணமாக மலேஷியா சென்றுள்ளார். கோலாலம்பூரில், மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், ராணுவ அமைச்சர் முகமது ஹசன், வெளியுறவு அமைச்சர் ஷம்ப்ரி அப்துல் காதிர் ஆகியோருடன் இரு தரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து, ராஜ்நாத் சிங் பேச்சு நடத்தினார். குறிப்பாக, நம் நாட்டின் பொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் தேஜஸ் போர் விமானங்களை வாங்குவதற்கு மலேஷியா மிகவும் ஆர்வமாக உள்ளது. சீனா, தென் கொரியா போன்ற நாடுகளில் தயாராகும் போர் விமானங்களை விட, தேஜஸ் விமானத்தில் அதி நவீன வசதிகள் உள்ளன. இலக்கை துல்லியமாக தாக்கும் ஆயுதங்கள், நவீன ரேடார்கள், ஏவுகணைகள், எந்தவிமான காலநிலையிலும் தாக்குதல் நடத்தக் கூடிய தொழில்நுட்ப வசதிகள் ஆகியவை உள்ளன. இந்த விமானங்களை வாங்குவதற்கு மலேஷிய அரசு ஏற்கனவே விருப்பம் தெரிவித்த நிலையில், ராஜ்நாத் சிங்குடன் இது தொடர்பாக மலேஷிய ராணுவ அமைச்சர் முகமது ஹசன் விரிவான பேச்சு நடத்தியதாக கூறப்படுகிறது.

‘ஆசிய பிராந்தியத்தில் அமைதியான சூழலை உருவாக்குவதில் இந்தியாவும், மலேஷியாவும் ஆர்வமாக உள்ளன. இரண்டு ஜனநாயக நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக நல்லுறவு நிலவுகிறது. ‘ராணுவம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து, மலேஷிய பிரதமர், அந்த நாட்டு அமைச்சர்களுடன் நடத்திய பேச்சு பயனுள்ளதாக இருந்தது’ என, சமூக வலைதளத்தில் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டு உள்ளார். ராஜ்நாத் சிங், தன் பயணத்தின்போது, நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் படையில் பணியாற்றி, பர்மா எல்லையில் நடந்த போரில் பங்கேற்ற சுந்தரம், 99, என்பவரை சந்தித்து, அவரை கவுரவித்தார்.