உத்தரப் பிரதேச நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக, சமாஜ்வாடி கட்சி மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்துள்ள பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, பட்டியல் சமூகத்தினர் மத்தியில் பகுஜன் சமாஜ் கட்சி அதன் ஆதரவை வலுவிழந்து வருகிறது என்ற பொய்யான பிரச்சாரம் குறித்து தனது கட்சித் தொண்டர்களை எச்சரிக்கையாக இருக்குமாறும் இது குறித்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும், “சமாஜ்வாடி கட்சி, பலமுறை முயன்று தோற்றுவிட்ட நிலையில், பா.ஜ.கவை சமாஜ்வாதி கட்சி தோற்கடிப்பது என்பது கடினமானது மட்டுமல்ல, அதனால் அது சாத்தியமற்றது என்பதை மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர். பா.ஜ.கவை தோற்கடிக்க, பகுஜன் சமாஜ் கட்சி அவசியம். சமாஜ்வாதி கட்சியின் வஞ்சக மற்றும் சூழ்ச்சி அரசியல் இனி வேலை செய்யப் போவதில்லை. மக்கள் ஏற்கனவே அக்கட்சி பற்றி மிகவும் எச்சரிக்கையாக உள்ளனர். மேலும், இப்போது முஸ்லிம் சமூகமும் அவர்களுடன் செல்லவில்லை. அவர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. சமாஜ்வாடி கட்சி தனது நிச்சயமற்ற கொள்கைகள் மற்றும் வஞ்சகத்தால் முற்றிலும் பின்தங்கியுள்ளது. அவர்களின் தந்திரத்திற்கும், முட்டாள்தனத்திற்கும் அவர்களே பலியாக வேண்டும்” என்று கூறினார். மேலும், கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பிரிவு தலைவர்களின் சிறப்பு கூட்டத்தில், பகுஜன் சமாஜ் கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் போட்டி அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்வதாக மாயாவதி குற்றம் சாட்டினார். விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும் கூறினார்.