மாவீரர்கள் மருதுபாண்டியர்கள் கிறிஸ்தவ ஆங்கிலேயனை எதிர்த்து திருச்சி கோட்டையில் ஜம்புத் தீவு பிரகடனம் செய்த நாள் 16-6-1801.
ஜம்புத் தீவு பிரகடனத்தில், அகண்ட பாரதம் என்ற உன்னத நோக்கத்தை அப்போதே வெளிப்படுத்தியுள்ளனர் மருது சகோதரர்கள். அதில், ‘ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால், நவாப் முகமது அலி, முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவைபோல் ஆகிவிட்டார்.
ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள். உங்களிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளாமல், ஒருவரையொருவர் பழிதூற்றிக் கொண்டு, நாட்டை அந்நியரிடம் ஒப்படைத்து விட்டீர்கள்.
இந்த ஈனர்கள் ஆளும் பகுதிகளிலெல்லாம், மக்கள் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. துன்பப்படுவது தெரிந்திருந்தும் எதனால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தாராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர்.
ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆகவேண்டும். ஆதலால் ஜம்புத்தீவு வாசிகள் ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும். இந்த ஈனர்களின் பெயர்கள்கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்யவேண்டும். அப்போதுதான் ஏழைகளும் இல்லாக் கொடுமையால் அல்லல்படுவோரும் வாழ முடியும்.
இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அவர்கள் ஒழிக்கப்பட வேண்டும். ஆதலால், மீசை வைத்த அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால், இந்த ஈனர்களை அழித்து விடவேண்டும். இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்கிபவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன். எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்.
இப்படிக்கு,
மருது பாண்டியன்
தற்போது ஒன்றியம், தமிழ் தேசம், தனித் தமிழ்நாடு என்ற பெயர்களில் தேசப் பிரிவினை எனும் நச்சை மக்கள் மனங்களில் விதைப்போரை காண்கையில், ஜம்புத்தீவு பிரகடனம் இன்றைக்கும் தேவையான ஒன்றாகவே தெரிகிறது.