வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படும், காலிஸ்தான் தீவிரவாதிகள் 19 பேரின் சொத்துகளை தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கனடாவில் இருந்து செயல்படும் காலிஸ்தான் தீவிரவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் 18-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்துக்கு, இந்தியா மீது கனடா குற்றம் சுமத்தியதால் இரு நாடுகள் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஹர்தீப் சிங் நிஜாருக்கு சொந்தமான பஞ்சாப் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள சொத்துகள், சீக்ஸ் ஃபார் ஜஸ்ட்டிஸ் அமைப்பின் தலைவர் குருபத்வந்த் சிங்குக்கு சொந்தமான சண்டிகர் வீடு ஆகியவற்றை என்.ஐ.ஏ நேற்று முன்தினம் முடக்கியது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படும் காலிஸ்தான் தீவிர வாதிகள் 19 பேரின் சொத்துகளை தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள பரம்ஜித் சிங், குல்வந்த் சிங், சுக்பால் சிங், சரப்ஜித் சிங், குர்மீத் சிங், குருப்ரீத் சிங், துபிந்தர் ஜீத் பாகிஸ்தானில் உள்ள வத்வா சிங், அமெரிக்காவில் உள்ள ஜே தாலிவால், ஹர்பிரீத் சிங், ஹர்ஜப் சிங், அமர்தீப் சிங், ஹிம்மத் சிங் பாகிஸ்தானில் உள்ள வத்வா சிங் பாபர். ரஞ்சித் சிங், துபாயில் உள்ள ஜஸ்மீத் சிங், ஆஸ்திரேலியாவில் உள்ள குர்ஜந்த் சிங், கனடாவில் உள்ள லக்பிர் சிங், ஜதிந்தர் சிங் ஆகியோர் வெளிநாடுகளில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு சொந்தமாக இந்தியாவில் உள்ள சொத்துகளை தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ்(யுஏபிஏ) முடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.