கர்நாடகாவில் நடைபெற்ற ஹிஜாப் தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஹிஜாப் இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசியமானதல்ல, பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய அரசு விதித்த தடை செல்லும் என்று தீர்ப்பளித்தனர். இத்தீர்ப்பை கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஒரு முஸ்லிம் அடிப்படைவாதி, ‘ஜார்க்கண்டில் சாலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்த நீதிபதியை ஆட்டோவை ஏற்றி கொலை செய்த சம்பவத்தை நீங்கள் அறிந்திருக்கலாம். அதேபோல அனைத்து இடத்திலும் உணர்ச்சிவசப்படும் மக்கள் உள்ளனர். எனவே, கர்நாடக நீதிமன்ற நீதிபதிகள் விபத்து, கொலை என ஏதாவது ஒரு அசம்பாவிதத்திற்கு உள்ளானால், அதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள்தான் பொறுப்பு’ என்று பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், ‘என் மீது கொலை மிரட்டல் வழக்குப் போடப் போகிறீர்களா? முடிந்தால் போட்டுப் பாருங்கள்” என்று காவல்துறையினருக்கும் சவால் விடுத்தார். நீதிபதிகளுக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்தவர் மீது தமிழக அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.