கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல்வர் பினராயி விஜயனின் பெயரை இந்த வழக்கில் இழுக்காமல் இருப்பதற்காக தனக்கு 30 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசப்பட்டது. சி.பி.எம் கட்சியின் செயலாளர் கோவிந்தன் மாஸ்டர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “விஜய் பிள்ளை என்ற நபரிடமிருந்து எனக்கு ஒரு அநாமதேய அலைபேசி அழைப்பு வந்தது. அவர் ஒரு சமரச பேச்சு வார்த்தை நடத்துவதாக கூறினார். என்னை பெங்களூருவை விட்டு வெளியேறச் சொன்னார். சி.பி.எம் கட்சியின் செயலாளர் கோவிந்தன் மாஸ்டர் என்னை மிரட்டி அந்த இடத்தை விட்டு வெளியேறும்படி கூறினார். பினராயி விஜயன், அவரது மகளும், தொழிலதிபருமான யூசப் அலி பற்றி பேசுவதை நிறுத்துமாறு என்னை மிரட்டினர். அவர்கள் எனக்கு 30 கோடி ரூபாய் வழங்குவதாகக் கூறினர். நான் ஹரியானா அல்லது ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு செல்ல வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட அனைத்து உதவிகளும் செய்துத் தரப்படும் என்றனர். போலி பாஸ்போர்ட்கள் தயாரானதும், நாட்டை விட்டு வெளியேற ஏற்பாடு செய்வதாகக் கூறினர். விஜய் பிள்ளை என்னை மிரட்டி நாட்டை விட்டு வெளியேறச் சொன்னார். இதில் முடிவு எடுக்க 2 நாட்கள் அவகாசம் தருவதாகக் கூறினர். எனக்கு முதல்வர் பினராயி விஜயனிடமோ அல்லது அவரது குடும்பத்தினருடனோ எவ்வித தனிப்பட்ட மோதலும் இல்லை, அவரது அரசியல் வாழ்க்கையை அழிக்கவும் நான் விரும்பவில்லை. என்னை மிரட்டியவர்களது அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை எனது வழக்கறிஞருக்கு அனுப்பியுள்ளேன். அந்த நபரின் புகைப்படங்கள் போன்ற முழு விவரங்களையும் ஊடகங்களுக்கு தருகிறேன். நான் பெங்களூரை விட்டு ஓடப் போவதில்லை. தயவு செய்து என் உயிருக்காக பிரார்த்தனை செய்யுங்கள். கடைசி வரை போராடப் போகிறேன் என்று முதல்வரின் முகத்திற்கு நேராகச் சொல்ல விரும்புகிறேன். என்னை நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். நான் உயிருடன் இருந்தால் பினராயி விஜயனின் முழு வணிக சாம்ராஜ்யத்தையும் அம்பலப்படுத்துவேன், என்னை அச்சுறுத்த நினைக்கவோ துணியவோ வேண்டாம். உங்களது உண்மையான முகத்தை உலகுக்கு வெளிப்படுத்துவேன்” என்று கூறினார்.