போலி கணக்குகளை முடக்க காலக்கெடு

சமூக வலைதளங்களில் பிரபலங்களின் பெயரில் போலியான கணக்குகளை துவங்கும் போக்கு பரவலாக காணப்படுகிறது. அவர்களின் பெயரில் போலி செய்திகளும் பரப்பப்படுகின்றன. அதனை பலர் பின்தொடர்வதும், நம்பி ஏமாந்துபோவதும்கூட நடக்கிறது. பிரபலங்கள் மட்டும்தான் என்றில்லை. பல சாமானியர்களின் பெயரிலும் போலி கணக்குகள் துவங்கி, அவர்களின் நண்பர்கள் வட்டத்தில் பணம் கேட்டு மோசடி செய்வதும் சமீப காலமாக அதிகரித்து உள்ளன. இதற்கு முடிவுகட்டும் விதமாக, தகவல் தொழில்நுட்ப விதிகளில் புதிய உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, முகநூல், டுவிட்டர், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பயனாளர்களின் பெயர்களில் துவங்கப்படும் போலி கணக்குகள் குறித்து சம்பந்தப்பட்டவர்களோ அல்லது அவர்கள் சார்பாகவோ புகார் அளிக்கப்பட்டால், 24 மணி நேரத்திற்குள் அந்த போலி கணக்குகள் முடக்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.