டேனிஷ் கனேரியா குற்றச்சாட்டு

ஷாகித் அப்ரதி மீது பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். ‘நான் ஒரு ஹிந்து என்பதால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அப்ரிதி எப்போதும் என்னை மோசமாக நடத்தினார். முஸ்லிமாக மதம் மாறுமாறு பலமுறை வற்புறுத்தினார். ஆனால் நான் அவருடைய வார்த்தைகளைப் புறக்கணித்தேன். நான் எல்லா மதத்தையும் மதிக்கிறேன். அப்ரிதியைத் தவிர, அணியின் எந்த வீரரும் என்னை மோசமாக நடத்தியதில்லை. என்னை விளையாட விடாமல் அடிக்கடி பெஞ்சில் உட்கார வைத்தார். என்னை அணியில் இருந்து நீக்குவது அவருடைய வழக்கம். நான் நன்றாக இருந்தபோதும் எனக்கு ஏன் இப்படி நடக்கிறது? என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனக்கு ‘ஏ’ பிரிவில் ஒப்பந்தம் கிடைத்ததும், அப்ரிதி என்னிடம் பல தவறான வார்த்தைகளை கூறினார். இவை அனைத்தும் என் மனநிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. நான் எப்போதும் அப்ரிதியிடம் இருந்து விலகி இருக்க முயற்சி செய்தேன்’ என தெரிவித்துள்ளார். இதனையடுத்து பல பாகிஸ்தானியர்கள் அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு சமூக ஊடகங்களில் மிரட்டல் விடுத்து வருகின்றனர். முன்னதாக, ஸ்பாட் பிக்சிங் தடை காரணமாக டேனிஷ் கனேரியா 2013ல் கிரிக்கெட்டில் இருந்து தடை செய்யப்பட்டார். மீண்டும் அவர் கிரிக்கெட் விளையாட முயற்சி செய்தபோதும், அவை பலனளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து முகமது அமீர் உட்பட பல வீரர்கள் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட விவரங்களை வெளியிட்ட அவர், அவர்களில் பலருக்கு விளையாட மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார் என்பது நினைவு கூரத்தக்கது.