அடடா மறந்துபோச்சே

வீட்டிற்கு சாமான் வாங்க கடைக்கு போனால். கொடுத்த லிஸ்ட்டில் ஒருசிலவற்றை மறந்துபோய் வாங்காமலே வந்திருப்போம். சிலர் தனது நெருங்கிய உறவுகள் பெயரைகூட மறந்துவிடுவார்கள். இவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21ம் தேதி அனுசரிக்கப்படுவதே அல்சைமர் எனப்படும் ‘உலக மறதி நோய் தினம்’.

அல்சைமர் என்பது வயதானவர்களுக்கு வரும் `டிமென்ஷியா’ என்கிற ஒரு ஞாபக மறதி நோய். வயதாகும்போது நமது மூளையின் செல்கள் மெல்ல மெல்ல சிதைக்கப்படும். இதன்மூலம் ஞாபக சக்தி குறைந்து நமது பெயரை கூட, யாராவது கேட்டால் டக்கென்று சொல்ல வராது. பெரும்பாலும் இது 60 வயதை தாண்டியவர்களுக்கே ஏற்படக்கூடியது இந்த நோய். இதைதான் அல்சைமர் என்பார்கள். இளம் வயது மறதி சில நேரங்களில் அலட்சியத்தால் ஏற்படுவது. அதையும் இதையும் போட்டு குழப்பிக் கொள்ளக்கூடாது.

1906ல் ஜெர்மனியை சேர்ந்த டாக்டர் அலோயிஸ் என்பவர்தான் அல்சைமர் நோய் குறித்து உலகுக்கு விளக்கினார். எங்கே வைத்தோம் என்பதை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்வதில் சிரமம். மனைவி, குழந்தைகள், நண்பர்கள் பெயர்கள்கூட மறந்து போகும். பிறந்த தேதி, திருமண நாள் உள்ளிட்ட முக்கிய தினங்களும் நினைவுக்கு வராது.

இந்நோயால் நினைவாற்றல் மாற்றம், தாறுமாறான நடத்தைகள், குணநலன்கள் மாற்றம், உடல் செயலிழப்பு உள்ளிட்டவைகளும் ஏற்படுகின்றன. உலக மக்களின் மரணத்திற்கான காரணங்களில் இந்த நோய் ஆறாவது இடம் பிடித்திருக்கிறது. அல்சைமர் நோய் எதனால் ஏற்படுகிறது என்று இதுவரை துல்லியமாக கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்குரிய சிறப்பு மருத்துவர்களை பார்த்து உரிய மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் மறதியின் தாக்கத்தை ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம்.

அல்சைமர் நோய்க்கான தடுப்பு வழிகளில் முக்கியமாக கற்பதும் விடா முயற்சியுள்ள மனநல நடவடிக்கைகளும் சிறந்த பலன் தரும் என்று சிகாகோ ரஷ் பல்கலைகழக மருத்துவர் டேவிட் பென்னெட் கூறியுள்ளார். அதனால் கற்பதை நிறுத்தாதீர்கள், தொடருங்கள். அல்சைமரை தடுத்திடுங்கள்.

அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒரு குழந்தைகள் போலத்தான் கருத வேண்டும். அவர்களிடம் அன்போடு நடந்து கொள்ள வேண்டும். நெருங்கிய உறவாக இருந்தாலும், தனது பெயரை சொல்லி அறிமுகப்படுத்தியே பேச வேண்டும். நீண்ட நேரம் சிந்திக்கும்படியான பழைய நினைவுகளை பேசக்கூடாது. அவர்களை தனிமையில் விடாமல் மனம் விட்டு பேச வேண்டும்.