புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் அருகே கீழநாஞ்சூர் கிராமத்தில், பழமையான காசி விசுவநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் சரிவர பராமரிக்கப்படாமல் சிதிலமடைந்து இருந்தது. இந்நிலையில் கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், கோயிலுக்குள் இருந்த கைலாசநாதர் சிவலிங்கத்தையும் நந்தி சிலையின் தலையை உடைத்துள்ளனர். மேலும், அங்கிருந்த கிருஷ்ணர், விநாயகர், அம்பிகை உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சிலைகளையும் சேதப்படுத்தியுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் அப்பகுதியை சேர்ந்த பொது மக்களிடம் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் சிலைகளை உடைத்த மர்ம நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.