ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் ஸ்விட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் சார்பாக இந்திய தூதரக குழுவின் செயலர் பவன்பதே உரையாற்றினார். அப்போது “பாகிஸ்தானில் தினமும் மதமாற்றம் நடைபெற்று வருகிறது. ஹிந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின சிறுமிகளை கடத்தி பாலியல் கொடுமை செய்து அவர்களை கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்து வருகின்றனர். இந்த கொடுமைகள் அனைத்தும் பாகிஸ்தான் அரசின் துணையோடு நடைபெற்று வருகிறது. அதேபோல, சிறுபான்மையினரின் கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவு தரப்படுகிறது. அவர்கள் அங்கு வெளிப்படையாக செயல்பட அரசே அனுமதி அளிக்கின்றது. ஐ.நா.,வால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்து வருகிறது. அவர்களுக்கு தொடர்ந்து ஓய்வூதியமும் வழங்குகிறது. இதற்கு, பாகிஸ்தான் அரசுதான் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்” என்று கூறினார்.