மதம் மாறாவிட்டால் மின்சாரம் கட்

எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட தாலுகா பிரதிநிதியாக இருக்கும் பழங்குடியினத்தவரான பாலவரசா கவுரு என்பவர், மின்சாரத் துறை ஊழியர் ஒருவர், தங்களை வலுக்கட்டாயமாக கிறிஸ்தவ மதமாற்றம் செய்யும் முயற்சிக்கு எதிராக மின்சாரத் துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அவரை பழிவாங்கும் விதமாக, கடந்த அக்டோபர் 15ம் தேதி முதல் அவரது வீட்டு மின் இணைப்பு எவ்வித அறிவிப்பும் இன்றி துண்டிக்கப்பட்டது. அவரது வீடு மற்றும் கோழிப் பண்ணைக்கு இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை. இந்த மின்வெட்டு காரணமாக அவரது குடும்பம் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டுள்ளது. அவரது பண்ணையில் உள்ள 60 கோழிகளும் இறந்துவிட்டன. இதனால், கடும் நிதி சிக்கலையும் எதிர் கொண்டு வருகிறார். மாநில மின்சாரத் துறையில் ஜூனியர் அக்கவுண்ட்ஸ் அதிகாரியான ஜெயராஜு, பாலவரசா கவுருவை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற பலமுறை முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் கவுரு அதற்கு மறுத்துவிட்டார். மேலும் தனது அண்டை வீட்டாருக்கும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதனையடுத்து மதம் மாற மறுத்ததால் அவர்களின் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாக கவுரு கூறியுள்ளார். கவுரு உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்து, ஜெயராஜூக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரினார், ஆனால் தற்போதைய உதவிப் பொறியாளர் (ஏஇ), டெண்டு ஸ்ரீனிவாஸ் ராவ், கௌரு மற்றும் நான்கு பேருக்கு மின் கட்டணம் செலுத்தப்படாததால், மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். ஆனால், நான் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவன் என்பதால் எனக்குரிய மானியத்துடன் எனது வீடு மற்றும் கோழிப்பண்ணை கட்டணத்தை தவறாமல் செலுத்தி வருகிறேன். மின் இணைப்பு துண்டிப்புக்கு மதமாற்ற முயற்சிதான் உண்மையான காரணம். இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளேன். ஆனால், அவர்கள் முதல் தகவல் அறிக்கையை இதுவரை பதிவு செய்யவில்லை. இதனால் தற்போது மாநில மனித உரிமைகள் ஆணையத்தை அணுகியுள்ளேன். தேவைப்பட்டால் ஆந்திர உயர்நீதிமன்றத்தையும் நாடப் போகிறேன் என கூறினார்.