காங்கிரஸிலிருந்து சி.ஆர். கேசவன் விலகல்

பாரதத்தின் முதல் கவர்னர் ஜெனரல், இந்திய தேசிய காங்கிரசின் தலைவர், மாநில முதல்வர், மேற்கு வங்க ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர் என பல பொறுப்புகளை வகித்து அவற்றுக்கு புகழ் சேர்த்தவர் மூதறிஞர் ராஜாஜி. அவரது கொள்ளுப்பேரன் சி.ஆர். கேசவன், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும், அனைவரையும் உள்ளடக்கிய தேசிய மறுமலர்ச்சியைக் காண வேண்டும் என்ற எண்ணத்துடன் நான் 2001ல் வெளிநாட்டிலிருந்து பாரதம் வந்தேன். ஆனால், காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றியதில் கடந்த 20 ஆண்டுகளாகவே நான் எந்தவித மதிப்புமிகு அடையாளத்தையும் உணரவில்லை. எனவே இனியும் என்னால் காங்கிரசுடன் இணைந்து செயல்பட முடியாது. இப்போது கட்சி இருக்கும் நிலைமை ஏற்றுக் கொள்வதாகயில்லை என்பதால் நான் தேசிய அளவில் எந்தப் பொறுப்பையும் சமீபமாக ஏற்கவில்லை. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையிலும் பங்கேற்கவில்லை. நான் இதுவரை வேறு எந்தக் கட்சியினருடனும் பேசவில்லை. அடுத்து என்ன காத்திருக்கிறது என்றுகூட எனக்குத் தெரியாது. காங்கிரஸ் கட்சி அளித்த வாய்ப்புகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன் ” என்று கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தின் துணை தலைவர், இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர், தேசிய செய்தி தொடர்பாளர் என பல்வேறு பொறுப்புக்களை வகித்துள்ள சி.ஆர் கேசவன், அந்த கட்சி அடிப்படை சித்தாந்தத்தில் இருந்து விலகி விட்டதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். பா.ஜ.க, பழங்குடியினத்தை சேர்ந்த திரௌபதி முர்முவை குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவித்தபோது, ஒரு காங்கிரஸ் தலைவர், திரௌபதி முர்மு ஒரு தீய சித்தாந்தத்தில் இருந்து வருபவர் என்றும், இவரை போன்ற சமுதாயத்தை சேர்ந்தவர்கள், எந்த நாட்டின் அதிபராகவும் வரக்கூடாது என்று கூறியதாக தெரிவித்துள்ளார். இது அதிர்ச்சி தனக்கு அளித்ததாகவும், அதனால் தான் ராகுலின் பாரத் ஜோடோ யாத்திராவில் பங்கேற்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடி, அந்தமானில் உள்ள 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா வீரர்கள் பெயர்களை சூட்டி கௌரவித்தார். ஆனால் காங்கிரசோ ராணுவ வீரர்களை அவமதிக்கும் வகையில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியதற்கு ஆதாரம் கேட்கிறது. ராணுவத்தை அவமதிக்கிறது. இவை சில உதாரணங்கள் மட்டுமே. இது போல தொடர்ந்து பல சம்பவங்கள் நடந்துள்ளன. இனியும் இதில் இருப்பது தவறு என்று முடிவெடுத்து, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளதாக கேசவன் தெரிவித்துள்ளார்.