சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “உண்மையை சொல்லவேண்டிய கடமை பா.ஜ.கவுக்கு உள்ளது. கோவை பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. ஜூன் 2019ல் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) கோவையை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் இருவர் இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள். கோவையில் கேஸ் சிலிண்டர் வெடித்ததாக முதலில் கூறிய அதிகாரிகள், பின்னர் கோலி குண்டு, ஆணிகள் உள்ளதாக கூறினர். பின்னர் ஜமேசா முபின் வீட்டை சோதனை செய்ததில் 55 கிலோ அம்மோனியம் நைட்ரேட், பேட்டரி உள்ளிட்ட வெடிப்பொருட்களை பறிமுதல் செய்தனர். ஆனால், அதனை முறையாக தெரிவிக்காமல் இந்த அரசு மறைத்துள்ளது. குண்டுவெடிப்புக்கு இரு நாட்களுக்கு முன்னர் ‘எனது மரணத்தை ஏற்றுக்கொண்டு பிரார்த்தனை செய்யுங்கள்’ என்ற தற்கொலைப்படை தாக்குதல் நடத்துபவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை ஜமேசா முபின் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் பயன்படுத்தியுள்ளார். பா.ஜ.கவுக்கு ஆதரவாக யாராவது ஒரு பதிவு போட்டால் கூட அவரை கைது செய்து பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யும் காவல்துறையினர், தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக 5 பேரை கைது செய்தும் அவர்கள் வீட்டில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டும் எந்த பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என இதுவரை தெரிவிக்கவில்லை. இவ்வழக்கு சம்பந்தமாக இன்னும் 8 பேர் காவல்துறை விசாரணையில் உள்ளனர். அவர்களை ஏன் கைது கணக்கில் காட்டவில்லை? யாரை காப்பாற்றுவதற்காக காவல்துறை இது அனைத்தையும் மூடி மறைக்கிறது? ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டு உயிர்பலி ஏற்பட்டால் தான் முதல்வர் ஒப்புக்கொள்வாரா?. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் மூலம் கலவர பகுதியாக கொங்கு பகுதி மாற்றப்பட்டு வருகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இந்த சம்பவம் தொடர்பாக ரகசிய கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், நடைபெற்ற சம்பவத்தை தமிழக அரசு மூடி மறைப்பதை குறிப்பிட்டுள்ளதுடன் என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிடவும் கோரிக்கை வைத்துள்ளோம். கடந்த 2021ம் ஆண்டு வரை தமிழக உளவுத்துறை மிகவும் வலிமையாக இருந்தது. ஆனால் தற்போது, என்.ஜி.ஓ, மிஷனரிகள் செய்யும் வேலையைதான் தமிழக உளவுத்துறை செய்து வருகிறது. உளவுத்துறையினர் அரசியலில் மட்டுமே உளவு பார்க்கின்றனர். தமிழக உளவுத்துறையில் 60 சதவீதம் பேர் குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர்களாக உள்ளனர். தமிழக காவல்துறையின் செயல்பாடுக்ள் வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளது” என தெரிவித்தார்.