மேட் இன் இந்தியா பீரங்கி மரியாதை

சுதந்திர தினத்தன்று வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் மூவர்ணக் கொடிக்கு சம்பிரதாய ரீதியில் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்துவது வழக்கம். அவ்வகையில், சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் சம்பிரதாய மரியாதைக்கு முதல் முறையாக பாரதத்திலேயே தயாரிக்கப்பட்ட ஹோவிட்சர் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. மேலும், முதல் முறையாக எம்.ஐ 17 ஹெலிகாப்டர்கள் செங்கோட்டையில் மலர்களை பொழிந்து தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தின. இதுவரை, சம்பிரதாய மரியாதைக்கு பிரிட்டிஷ் தயாரிப்பு பீரங்கிகளே பயன்படுத்தப்பட்டன. இந்த உள்நாட்டு தயாரிப்பு ஹோவிட்சர் பீரங்கிகள் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டி.ஆர்.டி.ஓ) வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தனது உரையில், “நாங்கள் எப்போதும் கேட்க விரும்பும் ஒலி, 75 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கேட்கிறோம். 75 ஆண்டுகளுக்குப் பிறகு செங்கோட்டையில் முதன்முறையாக பாரதத்தில் தயாரிக்கப்பட்ட பீரங்கியால் மூவர்ணக் கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. இந்த மேட் இன் இந்தியா பீரங்கியின் கர்ஜனையைக் கேட்டு அனைத்து பாரத தேசத்தவரும் உத்வேகம் பெறுவார்கள், அதிகாரம் பெறுவார்கள் என்று கூறினார். மேலும், ஆத்மநிர்பர் பாரத் (தன்னம்பிக்கை பாரதம்) என்ற தனது தொலைநோக்குப் பார்வையை ஏற்று, அதை நனவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக ஆயுதப்படை வீரர்களை மோடி பாராட்டினார்.