எல்.டி.எப் ஒருங்கிணைப்பாளர் மீது ஊழல் குற்றச்சாட்டு

கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில், இடதுசாரி ஜனநாயக முன்னணியின் (எல்.டி.எப்) ஒருங்கிணைப்பாளராக இருக்கும் இ.பி ஜெயராஜன் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை அதே கட்கியை சேர்ந்த பி. ஜெயராஜன் சுமத்தியுள்ளார்.அதில், கண்ணூர் அருகே மொராசாவில் வைதேகம் என்ற ஆயுர்வேத ரிசார்ட் கட்டுவதற்காக 11 ஏக்கர் நிலத்தை இ.பி ஜெயராஜன் சட்டவிரோதமாக கையகப்படுத்தினார்.அவரது மகன், பி.கே ஜெய்சன் மற்றும் மனைவி, பி.கே இந்திரா ஆகியோர் இந்த ரிசார்ட் வைத்திருக்கும் நிறுவனத்தில் இயக்குனர்களாக உள்ளனர் என குற்றம் சாட்டினார்.குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு, இ.பி.ஜெயராஜன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஜெயராஜன் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால், குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி கோவிந்தன் தெரிவித்தார். சுவாரஸ்யமாக, பி ஜெயராஜன் மற்றும் ஈ.பி ஜெயராஜன் இருவரும் கண்ணூரைச் சேர்ந்த இடதுசாரிக் கட்சித் தலைவர்கள்.குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு ஒருவரையொருவர் சந்தித்து பேசியுள்ளனர்.உடல்நலக் காரணங்களால் கட்சி நிகழ்ச்சிகளில் இருந்து வெகுகாலமாக ஒதுங்கி வரும் இ.பி.ஜெயராஜன், தான் எந்த தவறும் செய்யவில்லை என மறுத்துள்ளார். முன்னதாக, தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், ஈ.பி.ஜெயராஜனின் மகன் பி.கே.ஜெய்சன், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனது பினாமி நிறுவனம் மூலம், மாநில காவல்துறைக்கு கேமரா போன்ற உபகரணங்களை இறக்குமதி செய்வது குறித்து விவாதித்ததாகக் கூறியிருந்தார். மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஏழு எமிரேட்டுகளில் ஒன்றான ராஸ் அல் கைமாவில் ஜெய்சன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வைத்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.