புதுச்சேரியில் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அரசுடன் இணைந்து பணியாற்றிய தன்னார்வலர்களின் பங்களிப்பை பாராட்டும் விதமாக அன்னை தெரசா பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குறிப்பாக, துணை மருத்துவக் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் 119 பேருக்குத் தலா ரூ.10,000 வீதம் சிறப்பூதியத்தை அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வழங்கினார். பின்னர் பேசிய அவர், ‘இளைஞர்களின் ஒத்துழைப்பு கரோனா முன்னணிப் பணியாளர்களுக்கு அதிக பலத்தைக் கொடுத்தது. இக்கட்டான சூழ்நிலையை சிறப்பாகக் கையாளத் துணை நின்றனர். இந்த சூழ்நிலையைக் கையாளுவதில் பயிற்சி பெற்ற இளைஞர்கள் அனைத்திலூம் வெற்றி பெற வாழ்த்துகள். கரோனா களப் பணி உங்களை அனுபவசாலிகளாக மாற்றி இருக்கிறது. நம்மைச் சுற்றியுள்ள நட்பு, உறவு, பண்பாடு ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கான சூழலைத் தந்திருக்கிறது. இளைஞர்கள் அனைவரும் சேவை மனப்பான்மைபோடு பணியாற்ற வேண்டும்’ என்று அவர்களை பாராட்டினார்.