கொரோனா புதிய தடுப்பு மருந்து

கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்க பல தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அதே நேரம் கொரோனாவும் கப்பா, டெல்டா, பீட்டா, காமா, எப்சிலான் என பல புதிய உருமாற்றத்தை அடைந்து வருகிறது. அலை அலையாக மக்களையும் தாக்குகிறது. இதனால் மேலும் சக்தி வாய்ந்த தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் புதிய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கொரோனா வைரசுக்கு எதிராக தற்போது ஓர் பாதுகாப்பான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்துள்ளனர். புரோட்டோ ரிசர்ச் என்கிற இதழில் இந்த ஆய்வு முடிவுகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸின் 27 வகைகள் ஆயிரத்திற்கும் அதிகமான சாம்பிள்கள் இதற்காக ஆராயப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புரதத்தை கொண்டு வைரஸை அழிக்கும் வகையில் இந்த மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு வைரல் புரோட்டின் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்துக்கு அனுமதி கிடைத்தால் சக்தி வாய்ந்த புதிய தடுப்பு மருந்தை உருவாக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.