கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை

சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் திடீரென அதிகரித்துள்ள நிலையில், இது குறித்த ஆலோசனைக் கூட்டம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை செயலாளர்கள், ஆயுஷ் துறை செயலாளர்கள், மருந்து மற்றும் உயிரிதொழில்நுட்பத் துறை வல்லுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள மன்சுக் மாண்டவியா, “கொரோனா பல நாடுகளில் அதிகரித்துள்ளதை அடுத்து வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை.எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்கான உத்தரவை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பிறப்பித்துள்ளேன்.எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக்கின் சுகாதாரப்பிரிவு உறுப்பினர் வி.கே.பால், “3வது முன்னெச்சரிக்கை டோஸ் கொரோனா தடுப்பூசியை 28 சதவீத மக்களே போட்டுக் கொண்டுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முன்னெச்சரிக்கை தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது கட்டாயம்.மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும்போது அனைவரும் முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டும்” என கேட்டுக்கொண்டார். இதற்கிடையே எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் ரன்தீப் குலேரியா ஒரு பேட்டியில், “முதன்முதலில் கொரோனா பெருந்தொற்று நம்மை தாக்கியபோது அதற்குக்கு எதிராக நம் உடலில் எதிர்ப்பு சக்தி இல்லை. இதனால் மக்களுக்கு கடுமையான தொற்றுகள் ஏற்பட்டன.ஆனால், இப்போது தொற்று ஏற்பட்டு 3 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், மக்களுக்கு இயற்கையாகவே தொற்றை எதிர்கொள்ளும் எத்ரிப்புசக்தி கிடைத்துள்ளது.இங்கே பலருக்கும் பலமுறை தொற்று ஏற்பட்டுவிட்டது.மேலும், நமது நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கையும் அதிகம்.தற்போதைய நிலையில் நமது நோய் எதிர்ப்பு சக்தி கரோனா வைரஸை எதிர்கொள்ளத்தக்கது.அதனால், கரோனா வைரஸ் நம்மை மிக மோசமாக பாதிக்காத அளவிற்கு நம்மால் அதை எதிர்கொள்ள முடியும்.இருப்பினும் நாம் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.வைரஸ் கிருமி எப்போது எப்படி செயல்படும் என்று வரையறுத்து வைக்க முடியாது.கொரோனாவுக்குப் பின்னர் மருத்துவத் துறை ஒரு புரட்சியை சந்தித்துள்ளது.அதனால் நாம் மருத்துவர்களை அதற்கேற்ப தயார்படுத்த வேண்டும்” என கூறியுள்ளார்.