கொரோனா உயிரிழப்பு – குடும்பத்திற்கு ஓய்வூதியம்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, கொரோனா காரணமாக வீட்டில் சம்பாதிக்கும் உறுப்பினரை இழந்த குடும்பங்களுக்கு உதவ மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் மற்றும் மேம்பட்ட மற்றும் தாராளமயமாக்கப்பட்ட காப்பீட்டு இழப்பீடு ஆகியவற்றை மத்திய அரசு வழங்கும். மேலும், வேலையின்போது உயிரிழந்தவர்களுக்கான இ.எஸ்.ஐ ஓய்வூதிய திட்டத்தின் நன்மை தற்போது கொரோனா காரணமாக இறந்தவர்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது.

அத்தகைய நபர்களின் சார்பு குடும்ப உறுப்பினர்களுக்கு தற்போதுள்ள விதிமுறைகளின்படி தொழிலாளி பெற்றுவந்த சராசரி தினசரி ஊதியத்தில் 90 சதவீதத்துக்கு சமமான தொகை ஓய்வூதியமாக கிடைக்கும்.இது 24.03.2020 முதல் 24.03.2022 வரை உயிரிழப்பை சந்திக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பொருந்தும். பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு – ஊழியர்களின் வைப்பு இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டம் (இ.டி.எல்.ஐ)திட்டத்தின் கீழ் காப்பீட்டு சலுகைகள் மேம்படுத்தப்பட்டு தாராளமயமாக்கப்பட்டுள்ளன. மற்ற அனைத்து பயனாளிகளுடன் இணைந்து, கொரோனாவால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கும் இது உதவும்.அதிகபட்ச காப்பீட்டு சலுகையின் தொகை ரூ 6 லட்சத்திலிருந்து ரூ 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒப்பந்த / சாதாரண தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில், ஒரே நிறுவனத்தில் தொடர்ச்சியான வேலைவாய்ப்பு கொண்டிருக்க வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரது மரணத்திற்கு முந்தைய கடந்த 12 மாதங்களில் வேலை மாறிய ஊழியர்களின் குடும்பங்களுக்கும்கூட இதனால் நன்மை கிடைக்கும். இது குறித்து பேசிய பிரதமர் மோடி, உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு எப்போதும் துணையாக இருக்கும். இந்த திட்டங்கள் மூலம், அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய நிதி சிக்கல்களைத் தணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என்று கூறினார்.