‘சென்னையில் கொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்த, டி.எம்.எஸ் வளாகத்தில், கொரோனா நோயாளிகளுக்கான கட்டளை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டளை மையத்தை, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த மையத்தில், ‘104’ என்ற அவசர எண்ணுக்கு வரும் அழைப்புகளில், நோயாளிகளின் நிலையை தெரிந்து கொண்டு, அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. கட்டளை மையத்தின் வாயிலாக படுக்கை வசதிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. சில மருத்துவமனைகளில் ஏற்படும் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் இந்த கட்டளை மையம் உதவி செய்கிறது. விரைவில், இந்த மையத்தை போல், மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த மாநகராட்சி ஆலோசனை மையம் மற்றும் டி.எம்.எஸ்., கட்டளை மையத்தையும் ஒருங்கிணைத்து, நோயாளிகளுக்கு உதவி செய்ய, மாநகராட்சியும், சுகாதாரத் துறையும் முயற்சிகள் எடுத்து வருகின்றன. இதற்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர் மருந்துகள் வழங்கப்பட்டன. புதிய முயற்சியாக தற்போது, அறிகுறி, பயத்துடன் பரிசோதனை செய்ய வருபவர்களையும் அறிகுறி உடையவர்களாகக் கருதி, பரிசோதனை முடிவு வருவதற்கு முன்னதாகவே, அவர்களுக்கு மருந்து, மாத்திரை அடங்கிய பெட்டகம் வழங்கப்படுகிறது. இதற்காக, மருந்து பெட்டகங்கள் தயார் செயயப்பட்டு வருகின்றன. இந்த மருந்துகளை முன்னதாக சாப்பிடுவதால், உடல்நிலை பாதுகாக்கப்படும். இந்த முயற்சி வாயிலாக, கொரோனா தொற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.