நம் முன்னோர் தினமும் சமைத்து இறைவனுக்குப் படைத்த பின் காக்கைக்கு இடுவார்கள். விருந்தினருக்கு உணவளித்து வீட்டில் இருப்பவர்கள் உண்டபின் மீதமிருப்பவற்றை ஏழைகளுக்கு தானம் அளிப்பார்கள். கால்நடைகளையும் போஷித்தார்கள்.
அன்றன்று உணவு சமைத்து உண்பது ஆரோக்கியத்தின் அடையாளம். குளிர்சாதனப் பெட்டியும் வைத்தெடுத்து மீண்டும் சுட வைத்து சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மைக்ரோ ஓவனின் சூடூட்டும் தன்மையால் உணவின் அடிப்படை சத்துகளை அழித்து விடுகிறதாம். கெட்டுப்போன உணவைத் தின்பதால் பக்கவாதம் போன்ற நோய்கள் உண்டாகின்றன.
இன்றைக்கு பழைய சோறும் நீராகாரமும் மேலைநாடுகளில் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. நீரூற்றி வைத்த பழைய சோறும் சின்ன வெங்காயமும் அளிக்கும் ஆரோக்கியம் பற்றி வாட்ஸ்அப் பகிர்வுகளில் வலம் வருகின்றன. “அத்தையுடைய அரு மையை சிற்றப்பன் சொல்லித் தெரிய வேண்டுமா?” என்பதுபோல் உள்ளது இது. தினமும் இறைவனுக்கு நைவேத்தியம் படைத்து உணவு உண்ணும் பழக்கம் நம் பாரத நாட்டுப் பண்பாட்டை வெளிநாடு சென்றதும் மறப்பது ஏன்? வெளிநாடுகளில் வார இறுதி நாள்களில் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சனிக்கிழமைதோறும் குளிர்சாதனப் பெட்டியில் மீதமிருக்கும் உணவை உண்டுவிடுவார்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் அடுத்த ஒரு வாரத்துக்கு சமைத்து வைத்து விடுகிறார்கள்.
தவிர, பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் உணவுகளோடு பல்வேறு ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. சமைத்த உணவை மூன்று மணி நேரத்துக்குள் உண்ண வேண்டும். அந்த உணவை அனுதினமும் சமைத்து முதலில் கடவுளுக்குப் படைத்து பின் உண்ணலாமே. அப்படி நிவேதனம் செய்தபின் உண்ணும் பிரசாதம் ஞானம், வைராக்கியம் இவற்றை ஏற்படுத்தும். இதனால், ஏதோ சந்நியாசியாகி விடுவோம் என்பதல்ல பொருள். நிலையானது எது? நிலையற்றது எது? என்ற அறிவும், தேவையற்றவற்றின் மீது மோகம் ஏற்படாத நிலையும் மொத்தத்தில் மனத் தெளிவும் நன்றாக சிந்திக்கும் திறனும் கிடைக்கிறது.