இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் மதமாற்று நிகழ்வுகள் அதிகரித்திருப்பதாக தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி. ஆனந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழக அரசு நிச்சயமாக விளக்கம் அளிக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக குறிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு மதமாற்ற நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது என இந்துமுன்னணி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. தற்போது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு அரசு நிறுவனமே, தமிழகத்தில் மதம் மாற்றம் அதிகரித்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. பல்வேறு இடங்களில் அரசு விதிகளுக்கு புறம்பாக சட்ட விரோத சர்ச்சுகளும், பள்ளிவாசல்களும் உருவாகி வருகின்றன. ஆளுங்கட்சி பிரமுகர்களே பல்வேறு இடங்களில் இத்தகைய சட்டவிரோத செயல்களுக்கு ஆதரவாக செயல்பட மாவட்ட நிர்வாகங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அரியலூர் மாணவி தற்கொலை சம்பவத்திலும் மதமாற்றம் தொடர்பில இருக்கலாம் என்ற காரணத்தால் மதுரை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. தற்போது தமிழகத்தே உலுக்கிய அன்புஜோதி சரணாலய முறைகேடுகள் விவகாரத்திலும் மதமாற்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளது தெரியவருகிறது. தமிழகத்தில் சில வருடங்களுக்கு முன்பு, கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுபோல அதிக அளவில் மதமாற்றங்களும் சட்டவிரோத சர்ச்சுகளும் உருவானதே மண்டைக்காடு கலவரத்திற்கு காரணம் என அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் அமைக்கப்பட்ட நீதியரசர் வேணுகோபால் கமிஷன் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையினை மையமாக வைத்து புதிதாக மத வழிபாட்டுத்தலம் உருவாக மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற வேண்டும் என அப்போதைய எம்.ஜி.ஆர் அரசு உத்தரவிட்டது. தற்போதுள்ள தி.மு.க அரசு, அதனை காற்றில் பறக்க விட்டு பல்வேறு இடங்களில் அனுமதியில்லாத ஜெபக்கூடங்களும், பள்ளிவாசல்களும் சட்ட விரோதமாக ஏற்படுவதை கண்டும் காணாமல் வேடிக்கை பார்த்து வருகிறது. மேலும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பல நவீன வசதிகளுடன் புத்தம் புதிய வாகனங்கள் வாங்கப்பட்டு, மிகப்பெரிய அளவில் மதமாற்றம் நடத்துவதற்கு அன்னிய சக்திகளின் துணையோடு மிஷநரிகள் வேலையை துவக்கி உள்ளதாக தெரிகிறது. ஹிந்துக்கள் பகுதிகளில் தொடர்ந்து மத மாற்றங்களும் சட்டவிரோத சர்ச்சுகளும் பள்ளிவாசல்களும் உருவாகி வருவது மிகவும் ஆபத்தானது. இது தமிழகத்தில் மிகப்பெரிய மத மோதலை ஏற்படுத்தக் கூடும். எனவே தமிழக அரசு தமிழகத்தில் மதமாற்றம் அதிகரித்து வருகிறது என தேசிய குழந்தைகள் நல ஆணையம் எச்சரித்த இந்த தருணத்திலாவது விழித்துக் கொண்டு அதிகரித்து வரும் மதமாற்றத்தை முற்றிலுமாக தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.