காப்பகத்தில் குழந்தைகளின் மதமாற்றம்

மத்திய பிரதேசத்தின் ரெய்சன் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளின் காப்பகம் ஒன்றிற்கு, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையத்தின் தலைவர் பிரியங் கனூங்கோ சமீபத்தில் ஆய்வுக்காக சென்றார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்த ஆய்வின்போது, காப்பகத்தில் உள்ள 3 குழந்தைகளின் மதம் மற்றும் அவர்களுடைய பெயர்கள் மாற்றம் செய்யப்பட்ட விவரம் தெரிய வந்துள்ளது. அவர்களின் பெயரில் புதிய ஆவணங்கள் மற்றும் மதநம்பிக்கைகள் உருவாக்கப்பட்டு இருந்தன. இவற்றை காப்பகத்தினை நடத்தி வருபவர்கள், யாரோ சிலருக்காக செய்துள்ளனர்” என தெரிவித்துள்ளார். முன்னதாக பிரியங் கனூங்கோ, ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் இளம்பெண்களை விலைக்கு வாங்கி, விற்கும் அவலம் பற்றி தெரிய வந்ததையடுத்து அங்கு அதற்கான விசாரணைக்கு சென்றார். அப்போது அவர், “அந்த இளம்பெண்கள் கட்டாயத்தின் பேரில் விபசாரத்தில் தள்ளப்பட்ட குற்றச்சாட்டு உள்ளது. சென்ற இடத்தில், சிறுமிகளின் மற்ற குடும்ப உறுப்பினர்கள் பலரையும் வீடுகளில் காணவில்லை. அவர்களும் விபசாரத்தில் தள்ளப்பட்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அந்த கிராமத்தில் இருந்த 27 இளம்பெண்கள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு இந்த கிராமத்தில் பெரிய அளவில், கும்பலாக பெண்களை விபசாரத்திற்கு விற்கும் அவலங்கள் நடந்தது தெரிய வந்துள்ளது” என அவர் கூறியுள்ளார்.