பா.ஜ.க மூத்த தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாயா, கட்டாய மத மாற்றத்தை தடுக்க உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், ‘நாட்டின் பல பகுதிகளிலும் கட்டாய மத மாற்றம் நடக்கிறது. ஆசையை தூண்டுதல், ஏமாற்றுதல், பலாத்காரம், கடத்தல், அச்சுறுத்துதல், மூட நம்பிக்கைகளை பரப்புதல் உள்ளிட்ட பல வழிகளில் மத மாற்றங்கள் நடக்கின்றன. இது, தேசிய அளவிலான பிரச்சினையாக உள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார். இந்த மனு கடந்த வாரம், உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், “கட்டாய மத மாற்றம் நாட்டில் மிகத் தீவிரமான பிரச்சினையாகும். இது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல். இதைத் தடுக்க, மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மதமாற்றம் செய்வதை தடுக்க, மத்திய அரசிடம் என்ன திட்டம் உள்ளது. என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய உள்துறை அமைச்சக துணைச் செயலாளர் சார்பில் நீதிமன்றத்தில் ஆவணம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஆவணத்தில், ‘மதச் சுதந்திரம் என்ற பெயரில் வேற்று மதத்தினரை மதமாற்றம் செய்வது அடிப்படை உரிமைகளில் அடங்காது. இது மோசடி, ஏமாற்றுதல், வற்புறுத்தல் அல்லது பணம், பரிசுப் பொருட்கள் கொடுத்து மதம் மாற்றுவதற்கான உரிமையாக நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ள கோரிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டு பரிசீலிக்கும். மனுதாரர் கூறியுள்ள பிரச்சினையின் தீவிரத்தை மத்திய அரசு உணர்ந்துள்ளது’ என கூறப்பட்டுள்ளது.