ஜம்முவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 14) அன்று ஒரு வாட்ஸ்அப் குழுவில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை மாணவர் ஒருவர் பாராட்டியதால், அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதல் வெடித்தது. இதில் 5 மாணவர்கள் காயமடைந்தனர். ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (ஜி.எம்.சி.எச்) உள்ள ஆண்கள் விடுதியில் இரு குழுக்களிடையே இந்த மோதல் ஏற்பட்டது. காயமடைந்த ஐந்து மாணவர்களில் நான்கு பேர் ஜம்முவைச் சேர்ந்தவர்கள், ஒருவர் காஷ்மீரைச் சேர்ந்தவர். காயமடைந்தவர்கள் அருணேஷ், அக்ஷித், அனிகேத், ஹசீப் மற்றும் உமர் ஃபரூக் என அடையாளம் கணப்பட்டுள்ளனர். முதலாம் ஆண்டு எம்.பி.பிஎ.ஸ் மாணவர்களுக்கான கல்வி நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு வாட்ஸ்அப் குழுவில் “இது (தி கேரளா ஸ்டோரி) நல்ல படம்” என்று அவர்களில் ஒருவர் எழுதியதால் மோதல் வெடித்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குற்றம் சாட்டினர். இதில், சில வெளியாட்களும் கலந்து கொண்டு தாக்கியதாக தெரிகிறது. அந்த நபர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, உயிர்வேதியியல் துறையைச் சேர்ந்த டாக்டர் ஏ எஸ் பாட்டியா தலைமையிலான குழுவால் மாணவர்களின் இந்த பிரச்சனை குறித்து உள் விசாரணை நடத்தப்படும் என்று ஜி.எம்.சி முதல்வர் டாக்டர் ஷஷி சுதன் ஷர்மா தெரிவித்தார். இந்த விசாரணை துவங்கியுள்ள நிலையில், 10 மாணவர்கள் இரண்டு மாதங்களாக விடுதியில் இருந்து வெளியேர்றப்பட்டனர். அவர்கள் வகுப்புகளுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.