கொல்கத்தாவில் அகில இந்திய இந்து மகாசபா அமைப்பு துர்கா பூஜை பந்தலில், மகாத்மா காந்தியின் தோற்றம் கொண்ட மகிசாசுரன் பொம்மை ஒன்றை, துர்கா தேவியின் சூலாயுதத்தால் வதம் செய்யப்படுவது போல அமைக்கப்பட்டிருந்ததால் பெரும் சர்ச்சை வெடித்தது. அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்த நாள் அன்று இந்த சர்ச்சை வெடித்தது. இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் காவல்துறையினர் அறிவுறுத்தலின்படி காந்தி பொம்மையை மாற்றிவிட்டு அங்கு மகிசாசுரன் பொம்மை வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பா.ஜ.க மாநில செய்தித் தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா கூறுகையில், “காந்திஜியை அவமதிக்கும் எந்த நடவடிக்கையையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆனால் திருணமூல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கத்தில் கடந்த காலங்களில் துர்கா பூஜை உட்பட பல பூஜைகள் பொதுமக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளன. இந்த சம்பவத்தை கவனத்தில் எடுத்து, அரசு நிர்வாகம் பாராட்டத்தக்க வகையில் உடனடியாக பதிலளித்தாலும், ஹூக்ளி சம்பவத்திற்குப் பிறகு அது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்பு, திருணமூல் காங்கிரஸ் கொடியுடன் கூடிய துர்க்கை அம்மன் சிலை இருத்தது. 2019ல் கொல்கத்தாவில் உள்ள ஒரு துர்கா பூஜை பந்தலில் இஸ்லாமிய பிரார்த்தனை ஒலிபரப்பட்டது. ஆனால் அதற்கும் இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல்வர் மமதா பானர்ஜி, மகாளய காலம் தொடங்குவதற்கு முன்பே பூஜைகளை துவக்கி வைக்கிறார், மேடையில் தவறான ஸ்லோகங்களை உச்சரிக்கிறார். திருணமூல் கங்கிரஸ், துர்கா பூஜையின் மத உணர்வை ஒரு கேலிக்கூத்தாக குறைத்துள்ளது” என்று தெரிவித்தார்.