மாணவர் இஸ்லாமிய அமைப்பு (எஸ்.ஐ.ஓ) மற்றும் முஸ்லீம் மாணவர் கூட்டமைப்பு சகோதரத்துவ குழு எனப்படும் முஸ்லிம் மாணவர்கள் அமைப்பு, ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்த பி.பி.சி வெளியிட்ட சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை திரையிட ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் குழுவைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த திரையிடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதுகுறித்து ஏ.பி.வி.பி மாணவர் தலைவர் மகேஷ் கூறுகையில், “இந்த விவகாரத்தை பல்கலைக் கழக அதிகாரிகளிடம் தெரிவித்து, இந்த அமைப்பின் அமைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளோம். கல்லூரி வளாகத்திற்குள் அனுமதியின்றி திரையிடலுக்கு இந்த குழு ஏற்பாடு செய்துள்ளது” என தெரிவித்தார். இதுகுறித்து பேசிய காவல்துறையினர், “சில மாணவர்கள் வளாகத்திற்குள் தடை செய்யப்பட்ட ஆவணப்படத்தை திரையிடல் செய்ய ஏற்பாடு செய்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. ஆனால் எழுத்துப்பூர்வ புகார் எதுவும் வரவில்லை. புகார் வந்தால் விசாரணை நடத்தப்படும்” என்றனர்.