டிஜிட்டல் மீடியா, ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு கட்டுப்பாடு

இந்த ஆண்டு பிப்ரவரியில், டிவிட்டர், வாட்ஸப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுடன் சேர்த்து, அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற ஓ.டி.டி ஸ்ட்ரீமிங் தளங்களையும், டிஜிட்டல் செய்தி நிறுவனங்களையும் இணைய அடிப்படையிலான பிற வணிக அமைப்புகளையும் கட்டுப்படுத்த புதிய விதிகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கான ஏற்பாடுகளை செய்ய, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.புதிய விதிகளின்படி, டிஜிட்டல் மீடியா நிறுவனங்கள் மூன்று அடுக்கு சுய கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்க வேண்டும்.அதன்படி அவை, பாரதத்தைத் தளமாகக் கொண்ட குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்க வேண்டும்.ஒரு சுய ஒழுங்குமுறை அமைப்பை நிறுவ வேண்டும்.மூன்றாம் நிலைக்கு, அமைச்சகம் மேற்பார்வையில் குறைகளை விசாரிக்க ஒரு குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ஸ்ட்ரீமிங் தளங்களுக்கான புதிய வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, அரசு எந்தவொரு தணிக்கையையும் அரசே நேரடியாக செய்வதற்குப் பதிலாக, சர்வதேச நடைமுறைக்கு ஏற்ப, அந்த நிறுவனங்களே, சுயமாக நிகழ்ச்சிகளை யு, யு/ஏ, ஏ என்ற மூன்று வகைகளில் வகைப்படுத்தும் வகையிலான வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் செய்தி நிறுவனங்களை பொருத்தவரை, இந்திய பத்திரிகை கவுன்சில் அல்லது கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட பத்திரிகை விதிமுறைகளைக் கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.