தொடரும் காங்கிரஸ் சொரோஸ் உறவுகள்

இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் ‘நீதிபதி வணிகப் பள்ளியில்’ (Judge Business School) இந்த மாத இறுதியில் விரிவுரை ஆற்றப் போவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். “இந்த மாத இறுதியில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு ராகுல் காந்தியை மீண்டும் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ பற்றி விரிவுரை செய்வார். ஸ்ருதி கபிலாவுடன் பிக் டேட்டா, ஜனநாயகம் மற்றும் பாரத சீன உறவுகள் குறித்து நெருக்கமான அமர்வுகளை நடத்துவார்” என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது. சுவாரசியமாக, சர்ச்சைக்குரிய ஹங்கேரிய அமெரிக்க கோடீஸ்வரரான ஜார்ஜ் சொரோஸின் ஓபன் சொசைட்டி அறக்கட்டளை 2013ம் ஆண்டு முதல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் பயனாளிகளின் கில்டில் உறுப்பினராக இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இடதுசாரி முதலாளித்துவ மனப்பான்மை கொண்ட ஜார்ஜ் சொரோஸ், பாரதம், அமெரிக்கா, சீனா உட்பட பல நாடுகளிலும் அரசியல் ஸ்திரத்தன்மையை சீர்குலைத்து, தனக்கு தேவைப்பட்டவர்களை ஆட்சியில் அமர்த்தில் லாபம் காண்பவர் என குற்றம் சாட்டப்பட்டவர். இங்கிலாந்தில் பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தியவர். ஜனவரி 2020ல், ஜார்ஜ் சோரஸ், உலகில் உள்ள தேசியவாதிகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்த்து ஒரு உலகளாவிய பல்கலைக் கழகத்தைத் தொடங்க 1 பில்லியன் டாலர் நிதியுதவி செய்வதாக உறுதியளித்தார். மேலும், பாரத் ஜோடோ யாத்திரையின் போது ஓபன் சொசைட்டி அறக்கட்டளையின் துணைத் தலைவர் சலில் ஷெட்டியும் ராகுல் காந்தியுடன் காணப்பட்டார். அதானி விவகாரத்தில் பாரதம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மீது ஜார்ஜ் சோரஸ் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நேரத்தில் இந்த விரிவுரை வந்துள்ளது. அதானி குழும சர்ச்சையை காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து எழுப்பி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், காங்கிரசின் சீனா உடனான நெருக்கமும் உலகம் அறிந்ததே. இந்த சூழலில் ராகுல் காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் விரிவுரை ஆற்றுவதும் பாரத சீன உறவுகள் குறித்து அமர்வுகளை நடத்துவதும் சிந்திக்கத்தக்கது.