தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு

கோவை, சேலம், மதுரை, கன்னியாகுமரி உள்பட பல மாவட்டங்களில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, சமஸ்கிருத பாரதி உள்ளிட்ட ஹிந்து அமைப்பினரின் வீடுகள், கடை, நிறுவனங்கள், வாகனங்கள் மீது பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணை குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட பி.எப்.ஐ மற்றும் எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்தும்கூட பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்கிறது. தி.மு.க ஆட்சியில் ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ள தமிழகத்தில் இந்த சம்பவங்களால் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், கடந்த 28ம் தேதி கடலூர் ,சிதம்பரத்தில் இந்து முன்னணி ஆதரவாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தவிர, பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்திற்கு மர்மநபர்கள் மிரட்டல் கடிதம் ஒன்று அனுப்பி உள்ளனர். அதில், பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.