தொடரும் வளர்ச்சிப் பயணம்

கடந்த நிதியாண்டில், இந்திய ரயில்வேதுறை, இதுவரை இல்லாத அளவுக்கு 1,512 மெட்ரிக் டன் சரக்குகளை ஏற்றி, முந்தைய ஆண்டின் சாதனையான 1,418 மெட்ரிக் டன்களை முறியடித்ததாக அதன் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், ரயில்வேயின் கடந்த நிதியாண்டு ரூ. 2.44 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது அதற்கு முந்தைய நிதியாண்டின் ரூ.1.91 லட்சம் கோடியை விட 27.75 சதவீதம் அதிகமாகும். மேலும், ரயில்வேதுறை, கடந்த ஆண்டில் பாதையில் மின்மயமாக்கல், புதிய ரயில் பாதைகள் அமைத்தல் மற்றும் தானியங்கி சிக்னல்கள் அமைத்தல், உலகின் மிக உயரமான ரயில் பாலம் அமைத்தல் என பல்வேறு பிரிவுகளில் வியத்தகு சாதனைகளை படைத்துள்ளது. சரக்கு போக்குவரத்து துறையில் அதன் சந்தைப் பங்கை அதிகரிப்பதற்கான உத்தியின் ஒரு பகுதியாக இந்திய ரயில்வே ‘விரைவு சக்தி’ சரக்கு டெர்மினல்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன்படி. கடந்த நிதியாண்டில், ரயில்வேதுறை 30 புதிய சரக்கு முனையங்களை நிறுவியது. இது முந்தைய ஆண்டில் நிறுவப்பட்ட 21 புதிய முனையங்களை விட அதிகமாகும். னது சரக்கு ஏற்றுதல் மற்றும் வருவாயை வெற்றிகரமாக அதிகரித்துள்ள ரயில்வேதுறை, வணிகச் சூழலை மேம்படுத்துவதற்கும், போட்டித் தரத்தில் உயர்தர சேவையை வழங்குவதற்கும் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இதன் விளைவாக, பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற சரக்கு கையாளும் நடைமுறைகள் ரயில்வேயில் அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது. உலகின் மிகப்பெரிய பசுமை ரயில் வலையமைப்பாக மாறும் நோக்கத்துடன், ‘மிஷன் 100 சதவீத மின்மயமாக்கல்’ என்ற இலக்கை அடைய இந்திய ரயில்வேதுறை முனைப்புடன் செயல்படுகிறது. டிசம்பர் 2023க்குள் அனைத்து அகலப்பாதை நெட்வொர்க்குகளையும் மின்மயமாக்க அது திட்டமிட்டுள்ளது. கடந்த நிதியாண்டில், 6,542 ரூட் கிலோ மீட்டர்கள் (RKM) மின்மயமாக்கப்பட்டன. இது அதற்கு முந்தைய நிதியாண்டின் அதிகபட்சமான 6,366 RKM ஐ விஞ்சியுள்ளது.