மத்திய அரசு வெளியிட்டுள்ள தரக்கட்டுப்பாட்டு விதிகளை மீறி, வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து எச்சரிக்கும் அறிவிக்கை ஒன்றை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐ.எஸ்.ஐ முத்திரையில்லாத மற்றும் மத்திய அரசின் தரக்கட்டுப்பாட்டு விதிகளை மீறி தயாரிக்கப்பட்ட பொருட்களை நுகர்வோர் வாங்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கை, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், தொழில்துறை சங்கங்கள், சட்ட சேவையாளர்கள், நுகர்வோர் சங்கங்கள் ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டது. நுகர்வோரையும், அவர்களுக்கான உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில், தரக்கட்டுப்பாட்டு விதிகளை மீறி விற்பனை செய்வோர் அல்லது அதில் தொடர்புடையோர் மீது வழக்குப்பதிவு செய்ய மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுபோன்ற வீட்டு உபயோகப் பொருட்களை யாராவது விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. தரக்கட்டுப்பாட்டு விதிகளை மீறி தயாரிக்கப்பட்ட 1,032 பிரஷர் குக்கர் மற்றும் 936 ஹெல்மெட்டுகளையும் பறிமுதல் செய்தது. பி.ஐ.எஸ் விதிகளை மீறி பொருட்கள் விற்பனை செய்யப்படுவதோ அல்லது தயாரிக்கப்படுவதோ தெரிந்தால், அது பற்றி https://www.services.bis.gov.in:8071/php/BIS_2.0/. என்ற இணையத்தில் மக்கள் புகார் செய்யலாம், தேசிய நுகர்வோர் உதவி எண்ணான 1800-11-4000 அல்லது 14404 என்ற எண்ணை தொடர்பு கொண்டும் புகார் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.