கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த ஜூலை 13ம் தேதி இரவு பள்ளியின் விடுதியில் 3வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்பதாகக்கூறி திட்டமிட்ட வகையில் அங்கு வன்முறை போராட்டம் நடத்தப்பட்டது. பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த இந்த வன்முறை கும்பலை சர்ந்தவர்கள், வகுப்பறைகளை அடித்து நொறுக்கினர், மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களைத் தூக்கிச் சென்றனர், அங்குள்ள பசுக்களின் மடியை அறுத்தெறிந்தனர், பள்ளி வளாகம், பள்ளி பேருந்துகள், காவல்துறை வாகனங்களுக்கு தீ வைத்தனர். இந்தக் கலவரத்தில் அங்கு படித்த 2 ஆயிரத்து 700 க்கும் மேற்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. வன்முறை கலவரம் சம்பந்தமாக, காவல்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் ஏற்கெனவே 322 பேரை கைது செய்தனர். மற்றவர்களை கைது செய்ய தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களின் சான்றிதழ்களை கொளுத்திய சின்ன சேலம் அருகே மாமந்தூரைச் சேர்ந்த லட்சாதிபதி என்ற நபரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். வீடியோவில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் அவரைத் தேடிவந்த நிலையில், அவர் தலைமறைவானார். திருப்பூரில் தனிப்படையினர் அவரை கைது செய்துள்ளனர்.