பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்பு

தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) கேரளாவின் கொச்சியில் உள்ள சிறப்பு என்.ஐ.ஏ நீதிமன்றத்தில், சமர்ப்பித்த அறிக்கையில், தடைசெய்யப்பட்ட முஸ்லிம் மத அடிப்படைவாத அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ), பயங்கரவாத அமைப்புகளான ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல்கொய்தாவுடன் தொடர்பு கொண்டுள்ளது என்று கூறியுள்ளது. மேலும், ‘பல பி.எப்.ஐ தலைவர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதற்கான வலுவான ஆதாரம் உள்ளது.இதற்கு விரிவான விசாரணை தேவை.பயங்கரவாத இயக்கத் தொடர்புகளுகாகவே பி.எப்.ஐ ஒரு ரகசியப் பிரிவை நடத்தியது.அந்த ரகசியப் பிரிவு மாநிலம் தழுவிய வலையமைப்பைக் கொண்டிருந்தது.மற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்களின் தரவு சேகரிப்புகள், அவர்கள் குறித்த பட்டியலைத் தயாரிப்பதற்கு அந்த பிரிவு பொறுப்பாக இருந்தது.அவர்கள் மாற்று சமூகத்தினர், முக்கியத் தலைவர்கள், அரசியல் கட்சியினரின் ஹிட்லிஸ்ட்டை தயாரித்தனர். ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் வெளிப்படையாக செயல்பட முடியாத நாடுகளில் பி.எப்.ஐ போன்ற தேச விரோத மற்றும் மத அடிப்படைவாத அமைப்புகளைப் பயன்படுத்தி தங்கள் நாசகார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. பி.எப்.ஐ அலுவலகங்கள், அந்த அமைப்பின் தலைவர்கள் வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது பி.எப்.ஐ அமைப்பின் தேச விரோத நடவடிக்கைகள் தொடர்பாக பல டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சமூக ஊடகக் குழுக்கள் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்ய பி.எப்.ஐ தலைவர்களின் முயற்சிகள் குறித்தும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், இமாம்கள், வழக்கறிஞர்கள், நலிந்த பிரிவினர் என சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே தனது செல்வாக்கை மேம்படுத்துவது, நிதி திரட்டும் திறனை விரிவுபடுத்துவது போன்ற நோக்கங்களுடன் பி.எப்.ஐ அமைப்பின் துணை நிறுவனங்கள் செயல்பட்டதும் விசாரணையில் உறுதியானது. இதுதொடர்பாக ஏற்கனவே பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.விசாரணை முடியும் தருவாயில் உள்ளது’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதனையடுத்து விசாரணையை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய என்.ஐ.ஏவுக்கு கூடுதலாக 90 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.கொச்சியில் தொடரப்பட்ட வழக்கில் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, அவர்களின் நீதிமன்றக் காவல் 180 நாட்களாக நீட்டிக்கப்பட்டது.